வடக்கு மாகாண கடற்தொழிலாளர் இணையம் காலிமுகத்திடலில் தற்போதைய அரசாங்கத்தை வீட்டுக்கு செல்லுமாறு கூறி முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்திற்கு தனது ஆதரவினை வழங்குவதாக தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் இணைப்பாளர் அண்டனி ஜேசுதாசன் தெரிவித்தார்.
வடமாகாண கடற்தொழிலாளர் இணையமும் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கமும் ஒன்றிணைந்து நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
தற்போது நாட்டில் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்துக்கு எதிராக முன்னெடுக்கப்படும் போராட்டத்திற்கு வடக்கு மாகாண கடற்தொழிலாளர் இணையமானது தனது ஆதரவை தெரிவித்துள்ளது. அத்தோடு வடபகுதியில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுடைய உரிமைகளுக்காக தொடர்ச்சியாக குரல் கொடுக்கும்.
வடக்கு கிழக்குப் பகுதிகளில் அரசானது திட்டமிட்ட வகையில் காணி சுவிகரிப்பு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது அதனை தடுத்து நிறுத்த வேண்டும்.
தற்பொழுது எரிபொருள் விலையேற்றத்தின் காரணமாக மீனவர்கள் கடும் பிரச்சினை எதிர்நோக்கி வருகின்றார்கள் எனவே அதற்குத் தகுந்த தீர்வினைப் பெற்றுத் தர வேண்டும்.
தமிழ்நாட்டு அரசாங்கமானது இந்திய இந்திய இழுவை மடி தொழிலாளர்கள் இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழையாமல் இருப்பதற்கான ஒரு நாடாளுமன்ற தீர்மானத்தினை தமிழ் நாட்டு நாடாளுமன்றத்தில் எடுக்க வேண்டும்.
தற்போது நாடு பூராகவும் இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் வெற்றி பெற்று ஒரு ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் தற்பொழுது அரசாங்கத்தில் நாடாளுமன்றத்தில் உள்ளோர் யாரும் மீண்டும் அமையவுள்ள அரசாங்கத்தினுள் உள்வாங்கப்பட கூடாது. புத்திஜீவிகள் மற்றும் சமூக நலன் சார்ந்தோர் மாத்திரம் எதிர்வரும் அரசில் உள்வாங்கப்பட வேண்டும்.
அத்தோடு எல்லா இனங்களாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய சகல மத அடையாளத்தையும் பாதுகாக்கக் கூடிய ஒரு அரசியல் யாப்பு உருவாக்கப்பட வேண்டும்.
எனவே பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய அன்றாடம் தொழிலுக்குச் சென்று உழைக்கும் மக்கள் கடும் பிரச்சினைக்கு முகம் கொடுத்து வருகின்றார்கள் அவ்வாறான மக்களுக்கான ஒரு தீர்வினைபெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.