கீழே ஆழம் தெரியாத பள்ளத்தாக்கு.மேலே மெல்லிய கண்ணாடிப் பாலம். காலில் ஆணிச் சப்பாத்துடன் இரவல் கைக்குழந்தை ஒன்றைச் சுமந்தவாறு பாலத்தைக் கடந்துசென்று குழந்தையை அக்கரை சேர்க்கவேண்டிய பொறுப்பைஎதிர்கொண்டுள்ளேன். மோசமான பொருளாதார நெருக்கடி நிலையில் இருந்து இலங்கையையும் மக்களையும் மீட்டெடுக்கின்ற தனதுசவாலை மேற்கண்டவாறு வர்ணித்துக்கூறியிருக்கிறார் பிரதமர் ரணில் விக்ரமசிங்க.
சில தினங்களுக்கு முன்பு இடைக்காலப் பிரதமராக நியமிக்கப்பட்ட ரணில், நாட்டின் நிலைவரம் குறித்து இன்று விசேடதொலைக்காட்சி அறிக்கை ஒன்றை விடுத்திருக்கிறார்.”அடுத்த இரு மாத காலப்பகுதி இலங்கை மக்கள் தங்கள் வாழ்வில் சந்தித்திராத மிக நெருக்கடியான நாட்களாக இருக்கப்போகின்றன”என்று பிரதமர் தனது அந்த விசேட அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.
நான் இந்தப் பொறுப்பை விரும்பி ஏற்கவில்லை. ஐனாதிபதியே என்னை அழைத்து பொறுப்பை என்மீது சுமத்தியுள்ளார். நாட்டு மக்களுக்கு உண்மைகளையும் பொய்களையும் மறைக்கவேண்டிய எந்த அவசியமும் எனக்கில்லை. இந்த உண்மைகள் விரும்பத்தகாதவையாகவும் திகிலூட்டுவனவாகவும்இருப்பினும் உண்மையான நிலைவரம்இதுதான். – என்றார் அவர்.
நான் பொறுப்பேற்றிருப்பது மிகவும் அபாயகரமான சவால். கத்தியின் மேல் நடப்பதைவிட இது பயங்கரமானது. பள்ளத்தாக்கு மிகவும் ஆழமானது.அடியே தெரியவில்லை. அதன் மேல் பாலம் மெல்லிய கண்ணாடியால் அமைக்கப்பட்டுள்ளது. பற்றி நடப்பதற்கு கைப்பிடி எதுவும் இல்லை. என்னுடைய கால்களில் அகற்ற முடியாத பாதணிகளை அணிந்துள்ளேன். அதன் அடியில் மிகக் கூர்மையான இரும்பு ஆணிகள் பொருத்தப்பட்டுள்ளன. கைக் குழந்தையைப் பாதுகாப்பாக அடுத்த பக்கத்துக்கு கொண்டு செல்ல வேண்டி உள்ளது. இந்தச் சவாலை நான் நாட்டிற்காகவே பொறுப்பேற்றேன்.
எனது நோக்கமும் அர்ப்பணிப்பும் ஒரு தனிமனிதன் , ஒரு குடும்பம், அல்லது ஒரு கூட்டத்தைப் பாதுகாப்பது அல்ல, முழு நாட்டினதும் மக்களைக் காப்பாற்றுவதும் இளைஞர்களது எதிர்காலத்தைப் பாதுகாப்பதுமேஆகும். உயிரைப்பணயம் வைத்து இந்த சவாலுக்கு நான் முகம் கொடுப்பேன். அந்தச் சவாலை வெற்றி கொள்வேன். அதற்கு உங்கள் அனைவரினதும் ஒத்துழைப்பையும் எனக்குத் தாருங்கள்.-இவ்வாறு ரணில் விக்கிரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தனது எஜமானனின் குழந்தையைப் பாதுகாப்பாகச் சுமந்தவாறு அறுந்துதொடங்கும் கயிற்றுப் பாலத்தைக் கடந்துசென்று அக் குழந்தையைப் பாதுகாத்த வேலைக்காரப் பெண் ஒருத்தியின் கதையைக் கூறும்”Caucasian Chalk Circle”என்ற ஜேர்மன் மொழி நாடகக் கதையை சுட்டிக் காட்டிய ரணில், தான் எதிர்கொள்ளும் சவாலை அதனுடன் ஒப்பீடு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது
. ——————————————————————- –
பாரிஸிலிருந்து குமாரதாஸன். 16-05-2022