பொருளாதார நெருக்கடியும் பசிபிணியும் வாழ்வாதார நெருக்கடியும் இலங்கை மக்கள் வாழ்வில் நாளாந்தம் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்ற தாக்கம், வீதியில் இறங்கி போராட வேண்டிய தேவையை உருவாக்கி இருக்கிறது.
கோட்டாகோகம, மைனா கோகம, நோ டீல் கம என நாட்டின் பல்வேறு இடங்களிலும் மக்கள் போராட்டங்களை நடாத்திக் கொண்டிருக்கின்றனர். இதன் மற்றொரு பரிமாணமாக மட்டகளப்பு நியாயப்பயணம் அமைகின்றது.
போர்க்காலங்களிலும் இயற்கை அனர்த்தங்களின் போதும் அதற்கு பின்னரான காலங்களிலும் ஏதோவொரு வகையில் எங்களுடைய உரிமைகளுக்காக வீதியில் இறங்கியிருக்கிறோம்.
இப்போதும் இந்த பொருளாதார நெருக்கடி நிலையில் சீரான பொருளாதாரம், வாழ்வாதார நெருக்கடிகளை சரி செய்தல் என எங்களுடைய தேவைகளையும் உரிமைகளையும் வலியுறுத்தும் வண்ணம் இந்த நடைப்பயணம் முன்னெடுக்கப்படுகின்றது.
வாழ்வின் அடிப்படைத் தேவைகள் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ள நிலையில் எங்களுடைய தேவைகள், உரிமைகளை வலியுறுத்தி முன்னெடுக்கப்படும் இந்த பயணம் மட்டகளப்பு சென்.செபஸ்த்தியார் தேவாலய முன்றில் ஆரம்பமாகி, அரசடி சுற்றுவட்டத்தின் ஊடாக காந்தி பூங்காவை சென்றடையும் வகையில் அமைதியான நடை பயணமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மே.12.அன்று ஆரம்பிக்கப்பட்டு இன்று 07ஆம் நாளாக தொடருகின்ற இந்த பயணத்தில் தமக்கான உரிமைகளை வேண்டி, பாதாதைகளாகவும் ஓவிய பதாதைகளாகவும் ஏந்திக் கொண்டு அமைதிப் பயணமாக இந்த போராட்டம் காலை 9:00 – 10:00 மணிக்கு காந்தி பூங்காவிற்கு சென்று சேரும் வகையில் முன்னெடுக்கப்படுகின்றது.
பயணங்கள் இல்லாமல் வழிப்பாதைகள் உருவாவதில்லை. என்ற வகையில் சேர்ந்து பயணப்படுதலும் சேர்ந்து குரல் கொடுத்தலும் எங்கள் ஒவ்வொருவரின் உரிமையை வென்றெடுப்பதற்கான வாய்ப்பாக இருக்க முடியும். எனினும் இந்த பயணம் என்பது ஆர்ப்பாட்டங்கள் இல்லாத குரோதமும் ஆக்ரோசமும் இல்லாத எந்தவகையிலும் வன்முறைகள் வேண்டாம் என்பதை வலியுறுத்தி, எங்களுடைய உரிமைகளை, எங்களுடைய தேவைகளை அமைதியான முறையில் எடுத்துச் சொல்வதாய், அமைதி நடை பயணமாகத் தொடர்கிறது. இந்த உரிமை போராட்ட பயணத்தில், ஒவ்வொரு சமூகங்களின் பங்கெடுப்பது என்பது முக்கியமானது. ஓவ்வொரு சமூகமும், சமூகத்தின் தனித்தனியன்களாக இருக்கின்றவர்களும், தங்களுடைய குறைந்தபட்ச தேவையை வலியுறுத்தி சொல்லுவதும் அதனூடாக தமது நியாயங்களை உரிமைகளை எடுத்துச் சொல்லுகின்ற வகையில் தொடருகின்ற பயணத்தில், எங்களின் குரல்வெளிப்பாட்டிற்காக நாமும் பயணப்படுவோம்: உரிமை பேசுவோம்.