குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
லங்கா ஈ நியூஸ் ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலிகொட காணாமல் போன வழக்கில் பிணை வழங்கப்பட்டோரின் பிணையை ரத்து செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இவ்வாறு நீதிமன்றில் நேற்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
எக்நொலிகொட காணாமல் போன வழக்கில் சில இராணுவ புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டதுடன் பின்னர் அவர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.
பிணையை ரத்து செய்யுமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விடுத்த கோரிக்கைக்கு பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
இதேவேளை, மருதானை தேபோலி மற்றும் மட்டக்குளி இராணுவ புலனாய்வு முகாம்களிற்கு கடந்த 2009ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் உட்பிரவேசித்த மற்றும் வெளியேறிய வாகனங்கள் குறித்த விபரங்களும் கோரப்பட்டுள்ளன.
ஹோமாகம நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. வழக்கு விசாரணைகள் அடுத்த 22ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.