நீர்கொழும்பில் இருந்து இயந்திர படகு ஒன்றில் ஊடாக, சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற 8 பேரை தென்கிழக்கு கடலில் வைத்து கடற்படையினர் இன்று (12) ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் கைது செய்து, அம்பாறை பானம காவற்துறையினரிடம் ஒப்படைத்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
கடற்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து இன்று அதிகாலை 2 மணியளவில் கடல் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அவுஸ்ரேலியா நோக்கி பயணித்துக் கொண்டிருந்த படகை சுற்றிவளைத்து இடைமறித்து சோதனையிட்டனர்.
அதில் சட்டவிரோதமாக 38 பேர் இருப்பதை கண்டுபிடித்து அவர்களை கைது செய்து கரைக்கு கொண்டுவந்து பானம காவற்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். அதில், 2வயதுக்கும் 60 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் உள்ளனர்.
மனித கடத்தல் வர்த்தகத்தில் ஈடுபடுவோர் என இனங்காணப்பட்ட அறுவர், ஆண்கள் 26 பேர், பெண்கள் ஐவர் மற்றும் சிறுவர்கள் 7 பேரும் அடங்குகின்றனர்.
இதனையடுத்து படகை, கடலில் இருந்து வாழைச்சேனை கடற்படை முகாமிற்கு இழுத்துச் சென்றுள்ளதாகவும் இதில் கைது செய்யப்பட்டவர்கள் நீர்கொழும்பு, யாழ்ப்பாணம். மட்டக்களப்பு பிரதேசங்களை சேர்ந்வர்கள் எனவும் இவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்