Home இலங்கை கோத்தா+ரணில் : அசுத்தக் கூட்டா ? நிலாந்தன்!

கோத்தா+ரணில் : அசுத்தக் கூட்டா ? நிலாந்தன்!

by admin

தனது பிள்ளைகள் மூன்று நாட்களாக பட்டினியில் வாடுவதை கண்டு, சகித்துக்கொள்ள முடியாத, தாயொருவர் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவமொன்று வெல்லவாய பகுதியில் இடம்பெற்றுள்ளது. தந்தைக்கு நிரந்தர தொழில் இல்லை.வேறு வருமான  வழிகளும் இல்லை.இதனால்,அக்குடும்பம் சுமார் 3 நாட்களாக நீரை மட்டுமே அருந்தி உயிர்வாழ்ந்ததாகக்  கூறப்படுகின்றது.இது முதலாவது செய்தி.

வெலிகேபொல,   பிரதேசத்தில் கிராமத்தில்  ஒரு  வறிய பெண் நோயுற்ற  தனது  பிள்ளைக்கு உணவுக்கு எதுவும் இல்லை என்பதால் அருகிலுள்ள உறவினருக்கு சொந்தமான ஈரப்பலா மரத்தில் காயொன்றைப் பறித்து 100 ரூபாய்க்கு விற்றுள்ளார்.அப்பணத்தில் 500 கிராம் அரிசியை வாங்கியுள்ளார்.ஈரப்பலா பறிக்கப்பட்டதை அறிந்த உறவினர், கோபமுற்று அந்தத்தாயைத் தாக்கியுள்ளார். இது இரண்டாவது செய்தி.

கதிர்காமத்தில்,மூன்று பிள்ளைகளின் தாயொருவர்,ஒரு கிலோ அரிசி, 250 கிராம் சீனி, 200கிராம் கருவாடு மற்றும் பிஸ்கட் என்பவற்றை வாங்கிக்கொண்டு வீடு திரும்பியுள்ளார். வழியில்,மீன் வியாபாரியொருவர் சைக்கிளில் வந்துள்ளார்.சைக்கிளை நிறுத்தி,மீன் வாங்கியுள்ளார்.அப்பொழுது,உணவுப்பொருட்கள் இருந்த பையை தரையில் வைத்துள்ளார்.மீனை வாங்கிக்கொண்டு,பையைப்  பார்த்தபோது,பையைக் காணவில்லை. பையை யாரோ திருடி விட்டார்கள்.இது மூன்றாவது செய்தி 

தொடரும் உணவுத் தட்டுப்பாடு காரணமாக சிறுவர்கள் மத்தியில் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்து வருவதாக கொழும்பு ‘லேடி ரிட்ஜ்வே’ சிறுவர் மருத்துவமனையின் குழந்தைகள் நல மருத்துவர் தீபால் பெரேரா கவலை வெளியிட்டுள்ளார்.அண்மை நாட்களில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 53 குழந்தைகளில் 11 பேருக்கு ஊட்டச்சத்து குறைபாடு உள்ளது என்றும், அவர்களில் நால்வருக்கு கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாட்டின் அறிகுறிகள் தென்படுகின்றன  என்றும் அவர் தெரிவித்துள்ளார்.இது நாலாவது செய்தி.

கடந்த 31ஆம் திகதி  “சவுத் சைனா மோர்னிங் போஸ்ற்” என்ற இணைய ஊடகத்தில் ஒரு கட்டுரை வெளிவந்தது. அதில் பெண்கள் மாதவிடாய் காலங்களில் அணியும் சுகாதார பாதுகாப்பு நப்கின்களின் விலை அதிகரித்த காரணத்தால் பாடசாலைக்குச் செல்லும் மாணவிகள் அவதிப்படுவதாகக்  கூறப்பட்டுள்ளது.மாதவிடாய் காலங்களில் பள்ளிக்கூடம் செல்வதை தாங்கள் தவிர்ப்பதாக மாணவிகள் தெரிவித்திருக்கிறார்கள்.இறக்குமதி செய்யப்படும் நப்கின்களுக்கு அரசாங்கம் 58 விகித வரி அறவிவிடுகிறது.இதனால் வெளிநாட்டு நப்கின்களை வாங்க முடியாத ஒரு நிலைமை.வறிய பெண்கள் பெருமளவுக்கு உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் நப்கின்களை பயன்படுத்தப்படுவதாகவும்,ஆனால் அவற்றின் விலையும் அதிகரித்திருப்பதால் பல குடும்பங்கள் அவற்றுக்காக காசை செலவழிக்க முடியாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.நப்கினா சாப்பாடா என்று கேட்டால் சாப்பாடுதான் முக்கியம் என்று பல குடும்பத்தலைவிகள் கருதுவதாகத் தெரிகிறது.இதனால் நப்கின்கள் இல்லாத காரணத்தால் பல மாணவிகள் பள்ளிக்கூடம் வருவதில்லை என்றும் அக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.மிகவறிய பெண்கள் விலை கூடிய நப்கின்களை வாங்குவதற்கு பதிலாக சீலைத் துண்டுகளை பயன்படுத்துவதாகவும் அது சுகாதாரமற்றதுநோய் தொற்றுக்கான காரணிகளில் ஒன்று என்று எச்சரிக்கப் பட்டிருக்கிறது.இது ஐந்தாவது செய்தி. 

கடந்தமாதம் 28ஆம் திகதி “தெ டெலிகிராப்” இணையத்தளத்தில் வெளிவந்த மற்றொரு கட்டுரையில்,ஆடைத் தொழிற்துறையைச் சேர்ந்த ஒரு தொகுதி பெண்கள் வேலையின்மை,வறுமை காரணமாக பாலியல் தொழிலை நோக்கிச் செல்வதாக கூறப்பட்டுள்ளது.இது ஆறாவது செய்தி.

இதுதான் ரணில் விக்கிரமசிங்க பதவியேற்ற பின்னரான நாட்டின் நிலை. எனினும் அவர் பதவியேற்ற பின் ஒரு விடயத்தில் மிகவும் தெளிவாக காணப்படுகிறார்.நாட்டில் எந்தப் பொருள்?எவ்வளவு கையிருப்பில் உண்டு?எவ்வளவு நாடுக்குத் தேவை?எவ்வளவு கடனாகக் கிடைக்கும்?  எப்பொழுது எந்த பொருளுக்கு தட்டுப்பாடு வரும்? எப்பொழுது பஞ்சம் வரலாம்? போன்ற  எல்லா விவரங்களையும் அடிக்கடி வானிலை அறிவித்தலில் கூறுவதுபோல வெளிப்படையாகச் சொல்லி வருகிறார். அதனால்தான் ஒரு முஸ்லிம் நண்பர் முகநூலில் பின்வருமாறு எழுதினார்….

ரனில் விக்ரமசிங்கவை இலங்கை கிறிக்கட் அணித்தலைவராக நியமித்தால்….

“அடுத்து வரும் போட்டிகளில் எமக்கு வீசுவதற்கு ஒரு பஞ்சு கட்டி கூட கிடைக்காது”

“இனி வரும் ஆட்டங்களில் இடை வேளையில் மூன்று மிடறு தண்ணீருக்கு பதிலாக  இரண்டு மிடறு தண்ணீரையே பருக வேண்டி வரும்”

“ஒக்டோபர் மாதம் வரும் போது கிறிக்கட் மட்டைக்கு பதிலாக நாங்கள் தென்னம் மட்டையே பயன் படுத்த வேண்டிவரும்”

“உக்ரேன் வீரர்களுடன் கிறிக்கட்டும் அதே விக்கட்டால் ரஷ்ய வீரர்களுடன் கிட்டிப்புள்ளும் விளையாடுங்கள்”…….

ரணில் விக்ரமசிங்க தெரிவிக்கும் புள்ளிவிபரங்கள் உண்மையோ பொய்யோ அவர் நாட்டின் நிலைமையை ஒளிவு மறைவின்றி மக்களுக்கு தெரியப்படுத்துகிறார் என்ற ஒரு தோற்றத்தை வெற்றிகரமாக கட்டியெழுப்பி விட்டார்.ஆனால் இது மக்களுக்குப் பீதியூட்டும் நடவடிக்கை  என்றும்,இதனால் வர்த்தகர்கள் பொருட்களைப்   பதுக்குகிறார்கள் என்றும் ஒரு விமர்சனம்  வருகிறது.  

ஆனால் இதுவிடயத்தில் ரணில் விக்கிரமசிங்கவிடம் வேறு உள்நோக்கங்கள் இருப்பதாக தெரிகிறது.நாட்டின் நிலைமையை வெளிப்படையாக செய்வதன்மூலம் மக்களை அவர் நெருக்கடிக்கு   தயார்படுத்துகிறார்.மக்களை உஷாராக இருக்குமாறு எச்சரிக்கிறார்.அதேசமயம் இந்த நெருக்கடிகளுக்குத் தான் பொறுப்பில்லை என்பதையும் மறைமுகமாக உணர்த்தப்பார்க்கிறார்.அவர் கூறுவது போல விடயங்கள் நடக்கும்பொழுது அவர் உண்மையைத்தான் சொன்னார்,எதையும் மறைக்கவில்லை என்ற உணர்வு மக்கள் மத்தியில்  பரவும். இது  தன்னைப் பலப்படுத்த உதவும் என்று அவர் நம்புகிறாரா? வியட்நாம்  விடுதலைப் போராட்டத்தின் தலைவர் கோசிமின் கூறிய“மக்களிடம் செல்லுங்கள்,மக்களுக்கு உண்மையைச் சொல்லுங்கள், மக்கள் உங்களுக்கு வெற்றியை பெற்றுத்தருவார்கள்”என்ற மேற்கோளை  ரணில் எப்படி விளங்கி வைத்திருக்கிறார்?

அவர் பிரதமராக வந்தபின் நாட்டுக்கு உள்ளேயும் நாட்டுக்கு  வெளியேயும் நம்பிக்கைகளை கட்டியெழுப்ப வேண்டிய ஒருவராகக்  காணப்படுகிறார்.நாட்டுக்குள் அவ்வாறு நம்பிக்கைகளை கட்டியெழுப்பினாரோ இல்லையோ நாட்டுக்கு வெளியே படிப்படியாக நம்பிக்கைகளைக்  கட்டியெழுப்பி வருகிறார் என்பது உண்மை.

ரூபாயை மிதக்க விட்டமை,சில  பொருட்களுக்கான வரியை அதிகரித்தமை,வட்டி விகிதத்தைக் கூட்டியமை,விலைக் கட்டுப்பாட்டை நீக்கியமை,அரசு செலவினங்களை குறைத்தமை,சில அமைச்சுக்களின் செயலர்களாக இருந்த படைத்துறை  பிரதானிகளின் இடத்துக்கு சிவில் அதிகாரிகளை நியமித்தமை,அமெரிக்காவினால் பயணத்தடை விதிக்கப்பட்ட சவேந்திர சில்வாவின் பதவியை மாற்றியமை,ஜனாதிபதியின் பொதுமன்னிப்பை  இடைநிறுத்தி,குற்றம் சாட்டப்பட்ட சிலரை  மீண்டும் கைதுசெய்தமை,பசில் ராஜபக்சவை நாடாளுமன்றத்திலிருந்து அகற்றியமை.போன்ற  மாற்றங்களோடு, முக்கியமாக ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைக்கும் விதத்தில் 21ஆவது திருத்தச் சட்டத்தை கொண்டுவரும் ஏற்பாடுகளையும் முன்னெடுத்து வருகிறார். 

மேற்கண்ட மாற்றங்களின்மூலம் நாட்டின் நீதித்துறை சுயாதீனமாக இயங்குகிறது என்ற ஒரு தோற்றத்தையும்,நாட்டில் ராணுவமய நீக்கம் நிகழ்கிறது என்ற ஒரு தோற்றத்தையும்,ராஜபக்சவின் அதிகாரம் குறைக்கப்படுகிறது என்று ஒரு தோற்றத்தையும் கட்டியெழுப்புவதே கோத்தா+ரணில்  கூட்டின் நோக்கமாகும்.அப்படி ஒரு தோற்றம் கட்டியெழுப்பப்பட்டால் மேற்கு நாடுகளையும் ஐஎம்எப் போன்ற பன்னாட்டு நிறுவனங்களையும் கவரலாம் என்று ரணில் அரசாங்கம் சிந்திக்கிறது.

ஒருபுறம் இந்தியா நாட்டுக்கு சேலைன் ஏற்றிக்கொண்டிருக்கிறது. இந்தியா திட்டமிட்டு சிறுகச்சிறுக உதவிகளைச்  செய்துவருகிறது. உடனடியாக பெருமெடுப்பில் உதவிகளைச் செய்யாமல்,சேலைன் ஏற்றுவது போல துளித்துளியாக இந்திய உதவிகள் கிடைக்கின்றன. இதன்மூலம் இந்தியா தனது அருமையை உணர்த்தமுற்படுகிறது. அதேசமயம்,பெருமெடுப்பிலான உதவிகள் அடுத்தடுத்த மாதங்களில் ஐ.எம்.எப்பிடமிருந்து கிடைக்கலாம் என்று ரணில் விக்ரமசிங்க எதிர்பார்க்கிறார்.

குறிப்பாக 21ஆவது திருத்தத்தின்மூலம் ஐ.எம்.எப்,மேற்கு நாடுகள்,எதிர்க்கட்சிகள்,காலிமுகத்திடலில் போராடிக் கொண்டிருப்பவர்கள்.ஆகிய நான்கு தரப்புக்களையும் திருப்திப்படுத்தலாம் என்று கோத்தா+ரணில் கூட்டு சிந்திக்கின்றது.

ஐஎம்எப், காலிமுகத்திடலில் போராடிக் கொண்டிருப்பவர்கள்,மேற்கு நாடுகள் போன்றன ராஜபக்சவை அதிகாரத்திலிருந்து அகற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.ஆனால் கோத்தா+ரணில் கூட்டு அதற்கு  உடனடியாகத் தயாரில்லை.கோட்டாபயவின்  அதிகாரங்களைக் குறைத்துவிட்டு அவரைத் தொடர்ந்தும் பதவியில் வைத்திருப்பதே  அவர்களுடைய  உள் நோக்கம்.

கோட்டாபய பதவி விலகத் தயார் இல்லை என்பதைத்தான் அண்மையில் அவர் அமெரிக்காவின் அவர் அமெரிக்காவின் ப்ளூம்பேர்க் (Bloomberg) செய்தி நிறுவனத்துக்கு  வழங்கிய செவ்வி காட்டுகிறது. “தோற்றுப்போன ஜனாதிபதி என்ற பெயருடன் விலகிச் செல்ல முடியாது”என்று அவர் கூறியிருக்கிறார் (Bloomberg) செய்தி நிறுவனத்துக்கு  வழங்கிய செவ்வி காட்டுகிறது.”தோற்றுப்போன ஜனாதிபதி என்ற பெயருடன் விலகிச் செல்ல முடியாது”என்று அவர் கூறியிருக்கிறார். 

அதாவது தான் இப்பொழுது தோற்றுப் போயிருக்கிறார் என்பதனை அவர் ஒப்புக்கொள்கிறார்.யுத்த வெற்றியை முதலீடாகக் கொண்டு மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப்  பெற்ற ஒரு குடும்பத்தின் பிரதிநிதி அவர். யுத்த வெற்றியை ஒரு குடும்பச் சொத்தாக மாறிய ராஜபக்சக்கள், அவர்களுக்கு முன்னிருந்த எல்லாத் தலைவர்களும் செய்த தவறுகளின் விளைவாக வந்த திரட்டப்பட்ட தோல்வியை சுமக்க வேண்டி வந்தமை என்பது இலங்கைத்தீவின் நவீன வரலாற்றில் ஒரு நகைமுரண்தான்.நாட்டின் பொருளாதாரத் தோல்விகளுக்கு ராஜபக்சக்கள் மட்டும் பொறுப்பில்லை.ரணிலும் உட்பட இனப்பிரச்சினையை  படைப் பலத்தின்மூலம் தீர்க்க முற்பட்ட எல்லாத்  தலைவர்களுமே பொறுப்புத்தான்.இவர்கள் எல்லாருடைய தொடர் தோல்விகளின் திரட்டப்பட்ட   விளைவுதான் கோத்தாபயவின்  தலையில் வந்து பொறிந்தது.

ஆனால் அவர் வெற்றி பெற்றவராகப் பதவி விலகுவாரா என்பது சந்தேகமே. ஏனென்றால் அவர் இனிப்  பெறக்கூடிய  எல்லா வெற்றிகளும் ரணில் விக்கிரமசிங்கவின்  கணக்கில்தான் சேர்க்கப்படும்.

கோத்தா+ரணில் கூட்டு ஒர்  அசுத்தக் கூட்டு என்று யாழ்ப்பாணத்தில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.அது ஒரு தந்திரக் கூட்டு.தோல்வியின் விளிம்பில் சிங்களத் தலைவர்கள் கட்சி பேதங்களைக் கடந்து எப்படி ஒருவர் மற்றவரைப் பாதுகாப்பார்கள் என்பதற்கு அதுவோர் ஆகப் பிந்திய உதாரணம்.

Spread the love
 
 
      
pCloud Premium

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More