தாய் நாட்டுக்கு தொடர்ந்தும் சேவையாற்ற எப்போதும் தயாராக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது இராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியின் இராஜினாமா கடிதத்தை பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க சபையில் இன்று சமர்ப்பித்தார்.
2020-2021ஆம் ஆண்டுகளில் கொரோனா தொற்றுநோயிலிருந்து மக்களைப் பாதுகாக்க அவ்வப்போது நாட்டை மூட வேண்டியதன் அவசியம் காரணமாக, பல ஆண்டுகளாக அதிகரித்து வந்த பொருளாதார நெருக்கடி மற்றும் அந்நிய செலாவணி பற்றாக்குறை ஆகியவை மேலும் அதிகரித்ததாக கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால் ஏற்பட்ட ஸ்திரமின்மைக்கு தீர்வு காணும் வகையில், நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களை அழைத்து அனைத்து கட்சி அல்லது தேசிய அரசாங்கத்தை அமைக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டதாக இராஜினாமா கடிதத்தில் கோட்டா குறிப்பிட்டுள்ளார்.
பொது மக்கள் மற்றும் பாராளுமன்றக் கட்சித் தலைவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஜூலை 14ஆம் திகதி முதல் ஜனாதிபதி பதவியில் இருந்து விலகியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.