மேல் நீதிமன்ற நீதிபதி நியமனத்தில் தொடர்பு கிடையாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மேல் நீதிமன்ற நீதிபதியாக சட்டத்தரணி ராமநாதன் கண்ணன் நியமிக்கப்பட்டதன் பின்னணியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் மறைகரம் செயற்பட்டுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியினர் குற்றம் சுமத்தியிருந்தனர்.
எனினும் இந்தக் குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் கிடையாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடக செயலாளர் ரகு பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைக்கு அமைய இவ்வாறு சட்டத்தரணி ஒருவருக்கு மேல் நீதிமன்ற நீதிபதி பதவி வழங்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கூட்டமைப்பின் கோரிக்கையை நிறைவேற்றியுள்ளதாகவும் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் குற்றம் சுமத்தியிருந்தார். எனினும் இந்தக் குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் கிடையாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இதேவேளை, சட்டத்தரணி கண்ணன் சட்ட மா அதிபர் திணைக்களத்தில் பத்தாண்டுகள் கடமையாற்றியுள்ளதாகவும் இந்த நியமனம் தொடர்பில் நீதிச்சேவை ஆணைக்குழு, சட்ட மா அதிபர் உள்ளிட்ட பல்வேறு தரப்புக்களிடமும் ஆலோசனை பெற்றுக் கொண்டதன் பின்னரே ஜனாதிபதி நியமித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.