கூவத்தூர் ரிசார்ட்டில் தங்கியுள்ள அதிமுக சட்டசபை உறுப்பினர்களால், சட்டசபைக்குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை முதல்வராக பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தின் ஆளுங்கட்சியான அதிமுகவில் நடைபெற்று வரும் குழப்பங்கள்,சசிகலா சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டதிலிருந்து விறுவிறுப்படைந்துள்ளது.
ஆட்சி அமைக்க போவது யார் என்பதில் ஒபிஎஸ் மற்றும் இபிஎஸ் எனப்படும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. ஆனால் இருதரப்பும் பல்வேறு முறை ஆளுநரை சந்தித்து,ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளனர்.
கூவத்தூரில் 9 நாட்களாக அதிமுக சட்டசபை உறப்பினர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தங்களை ஆளுநர் ஆட்சி அமைக்க அழைப்பார் என்று அவர்கள் எதிர்ப்பார்த்து காத்திருந்த நிலையில், சட்டசபைக் குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி மூன்றாவது முறையாக இன்றும் காலை ஆளுநரை சந்திக்க சென்றுள்ளார்.
இன்று ஆளுநர் ஆட்சி அமைக்க கூறினால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சட்டசபை உறுப்பினர்களின் ஆலோசனை, கூவத்தூரில் நடைபெற்று வருகிறது. ஆளுநர் உடனான சந்திப்பு முடிந்த உடன் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் இன்று மாலையே முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்பார் என்று அவரது ஆதரவு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.