தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு அனைவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய நியாயமான தீர்வைப்பெற்றுக்கொடுக்க அரசாங்கம் தற்போது குறித்த அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடிவருவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பிரச்சினைகள் இருக்குமானால் அவற்றைத் தீர்க்கும்வரை கல்வி நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டைகளைப் போட்டுக்கொள்ள வேண்டாம் என தான் அனைத்து பல்கலைக்கழக மாணவர் சங்கங்களிடமும் கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பில் ஜனாதிபதி அவர்களுக்கும் பல்கலைக்கழக மாணவர் சங்க பிரதிநிதிகளுக்குமிடையே இன்று(16) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்தப் பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுக்கொள்வதற்கு முன்வைக்கப்படக்கூடிய முன்மொழிவுகள் தொடர்பில் மாணவ சங்கப் பிரதிநிதிகள் விரிவாக தமது ஆலோசனைகளை முன்வைத்தனர்.
மாணவ சங்கங்கள், பீடாதிபதிகள், இலங்கை மருத்துவப் பேரவை, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியின் அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பிரனரதும் கருத்துக்களை கேட்டறிந்து இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.