யாழ்ப்பாணம் மாவட்ட செயலக மாதாந்த கலந்துரையாடல் மற்றும் சிறந்த உத்தியோகத்தருக்கான சான்றிதழ் வழங்குதல் நிகழ்வு மாவட்ட செயலர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் நேற்றைய தினம் புதன்கிழமை மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் கொவிட்-19 மற்றும் டெங்கு தொடர்பான விழிப்புணர்வு, கொவிட் -19 விடுமுறையை சுற்றிக்கைக்கு அமைய நடைமுறைப்படுத்தல், மரநடுகைத்திட்டம், ஆளணியை சீர்ப்படுத்தல், அலுவலக வளங்களை சிக்கனமாக பயன்படுத்தல், அரச நிறுவனங்களுக்கு கிடைக்கும் மின்னஞ்சல், தொலைபேசி அழைப்புக்களுக்கு சுற்றிக்கைக்கு அமைய உடனடியாக பதிலளித்தல், 60 வயதிற்கு உட்பட்ட அரச ஊழியர்களுக்கு ஓய்வு வழங்கல்,செலவீனங்களை கட்டுப்படுத்தல், வாடிக்கையாளர் சேவை குழுக்களை நியமித்தல், நலநோன்புத் திட்டங்கள் போன்ற விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.
அத்துடன் மாதாந்த சிறந்த உத்தியோகத்தருக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. மார்ச் மாதத்திற்கானது வி.அருந்தவகுமாருக்கும், ஏப்ரல் மாதத்திற்கானது கே.குணதர்சனாவிற்கும் , மே மாதத்திற்கானது எஸ்.நிர்மலாவிற்கும் , யூன் மாதத்திற்கானது ,எஸ்.தயானிக்கும் மாவட்ட செயலரினால் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இக்கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், மாவட்டச் செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், மற்றும் கிளைத் தலைவர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.