ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது அமர்வு சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் இன்று ஆரம்பமாகி, ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது
இதேவேளை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது அமர்வில் பங்கேற்பதற்காக அரசாங்கத்தின் சார்பில் அமைச்சர்களான அலி சப்ரி மற்றும் விஜயதாச ராஜபக்ச ஆகியோர் ஏற்கனவே ஜெனிவா சென்று அங்கு கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளனர்.
அத்துடன் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான், காவிந்த ஜயவர்தன மற்றும் சட்டத்தரணி எரந்த வெலியங்கே ஆகியோர் ஜெனிவா சென்றுள்ளனர்.
இதேவேளை,
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக சட்டத்தரணி நுவன் போபகே நேற்று முன்தினம் (10.09.22) ஜெனிவா புறப்பட்டுச் சென்றார்.
நீண்ட காலமாக தமது சங்கத்தின் சட்ட ரீதியான பணிகளில் ஈடுபட்டமை, காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் ஈடுபட்டமை காரணமாக ஜெனிவா அமர்வில் உரையாற்றுவதற்கான சந்தர்ப்பம் நுவான் போபகேவிற்கு கிடைத்துள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மீதான அடக்குமுறை குறித்து அவர் சர்வதேசத்தை தெளிவுபடுத்தவுள்ளதாகவும் அதில் குறிப்பிடபட்டுள்ளது.
மேலும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அமர்வுகளில் கலந்துகொள்வதற்காக இலங்கையில் இருந்து தமிழ் அரசியல்வாதிகள் சிலரும் நேற்று ஜெனிவா சென்றடைந்துள்ளனர்.