Home இலங்கை எதிர்வரும் 15ஆம் திகதி வெண்பிரம்பு தினம் – பார்வையற்றோர் தொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்

எதிர்வரும் 15ஆம் திகதி வெண்பிரம்பு தினம் – பார்வையற்றோர் தொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்

by admin

வெண்பிரம்பு பாதுகாப்பு தினமான எதிர்வரும் 15ஆம் திகதி பார்வையற்றவர்கள் தொடர்பிலான விழிப்புணர்வுகளை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் விதமாக செயற்திட்டங்களை முன்னெடுங்கள் என வன்னி மாவட்ட விழிப்புலனற்றோர் சங்கத்தின் தலைவர் பேரம்பலம் ஞானக்குமார் மற்றும் செயலாளர் கிருஷ்ணன் மைந்தகுமார் ஆகியோர் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர். 

யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தனர். 

மேலும் தெரிவிக்கையில், 

பார்வையற்றவர்கள் தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வுகள் ஏற்படுத்த வேண்டும். எதிர்வரும் 15ஆம் திகதி சர்வதேச வெண்பிரம்பு (வெள்ளைப் பிரம்பு )பாதுகாப்பு தினமாகும். அந்த நாளில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் செயற்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். 

வெண்பிரம்பை தாங்கியவர் வீதியில் எந்த பகுதியிலும் கடக்கலாம். அவர்களுக்கு இது தான் பாதசாரி கடவை என்பதனை அறிந்து கொள்ள முடியாது. வெளிநாடுகளில் வீதிகளில் பார்வையற்றவர்களும் வீதி குறியீடுகளை அறிந்து கொள்ள கூடிவாறான நிலைமை உண்டு. ஆனால் இலங்கையில் அவ்வாறான நிலைமை இல்லை. எனவே வீதியில் வெண்பிரம்புடன் ஒருவரை கண்டால் வாகனத்தினை அவதானமாக செலுத்துங்கள். 

வெண்பிரம்புடன் நிற்கும் ஒருவர் அதனை இரண்டாக மடித்து , கைகளை நீட்டினால் அவர் பாதையை கடக்க போகிறார் என அர்த்தம். அந்நேரத்தில் வீதியில் வாகனம் செலுத்துவோர் ,அவர்களுக்கு முன்னுரிமை அளித்து வாகனங்களை நிறுத்தி அவர்கள் வீதியில் கடக்க உதவ வேண்டும். 

அதேவேளை வெண்பிரம்பினை நான்காக மடித்து , வீதியில் கையை நீட்டினால் , அவர் போக்குவரத்து சாதனம் ஒன்றில் பயணிக்க விரும்புகின்றார் என அர்த்தம். அவ்வாறு ஒருவர் நின்றால் வரை வாகனத்தில் ஏற்றி செல்ல கூடியவர்கள் அவரை வாகனத்தில் ஏற்றி சென்று அவர் கூறும் இடத்தில் இறக்கி விடலாம். 

கடந்த 2009ஆம் ஆண்டுக்கு முன்னர்  பார்வையற்றவர்களுக்கு கிளிநொச்சியில் கல்லூரி ஒன்று இருந்தது. அங்கு அவர்களுக்கு தொழிநுட்பம் உள்ளிட்ட கற்கை நெறிகள் கற்பிக்கப்பட்டன. 

யுத்தம் மௌனித்த பின்னர் , ஆலமரத்தில் கூடு கட்டி கட்டி வாழ்ந்த மரங்கள், ஆலமரம் சரித்தவுடன் வாழ்விடம் இன்றி கலைந்து போனது போல எமது வாழ்வும் கலைந்து போனது. 

யுத்தம் காரணமாக உடலில் அவயங்களை இழந்து , பார்வையிழந்து பெருங்காயங்களுக்கு உரிய சிகிச்சைகளை பெற முடியாது எம்மில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். 

கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவுமின்றி வாழ்கிறோம். நாமும் எமது தேவைகளை நாமே நிவர்த்தி செய்து சாதாரணமானவர்களுடன் இணைந்து வாழ வேண்டும் என்பதே எமது விருப்பம். 

மாற்று திறனாளிகளுக்கு சமூக சேவைகள் திணைக்களம் ஊடாக மாதாந்தம் வழங்கப்படும் 5 ஆயிரம் ரூபாய் பணம் கூட எமக்கு இந்த முறை வழங்கப்படவில்லை. 

பார்வையற்றோர் தமது வாழ்வினை தாமே கொண்டு நடத்த கூடிய நிலைமையினை ஏற்படுத்தவே வன்னி விழிப்புலன் அற்றவர்கள் சங்கம் உழைத்து வருகின்றது. அதற்காக புலம்பெயர் உறவுகளும் , தாயக உறவுகளும் எமக்கு உறுதுணையாக உள்ளனர். 

வாழ்வாதாரம் என தற்காலிக நிவாரணமே தருகிறார்கள். 

வாழ்வாதாரம் என்பது ஒருவர் தனது வாழ்க்கையை முழுவதுமாக கொண்டு நடாத்துவதற்கு உதவி செய்வது ஆகும். ஆனால் இங்கே சிலர் வாழ்வாதார உதவி என தற்காலிக நிவாரணத்தையே கொடுக்கின்றார்கள். 

உதாரணமாக ஒருவருக்கு வாழ்வாதார உதவி என ஒரு பசுமாட்டை வாங்கி கொடுத்தல் , அந்த பசுமாடு பால் கறக்கும் மட்டுமே அது அவர்களின் வருமானத்தில் பங்கு வகிக்கின்றது. மாடு பால் கறக்காத போதே அவர்கள் வருமானத்திற்கு என்ன செய்வார்கள். வருமானமின்றி அந்த மாட்டினை தொடர்ந்து பராமரிக்க முடியாது அதனை விற்று விடுவார்கள். உடனே தாம் வாழ்வாதார உதவியாக வழங்கிய மாட்டினை விற்று விட்டார்கள் என குறை கூறுவார்கள். 

இதுவே இங்கே தற்போது நடைபெற்று வருகின்றது. இவர்கள் வாழ்வாதார உதவி என தற்காலிக நிவாரணத்தையே வழங்குகின்றார்கள். வாழ்வாதார உதவி என்பது நீடித்து நிலைத்து அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கூடியவாறு செயற்படுத்தப்பட வேண்டும். 

 உதாரணமாக தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டு , அங்கு தொழில் வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டு அவர்களுக்கான தொழில்களை வழங்குவதன் ஊடாக அவர்களின் வாழ்வாதாரத்தய் மேம்படுத்த முடியும். 

முற்றாக பார்வை இழந்தவர்களுக்கு நிரந்த வைப்பு.

எமது சங்கத்தில் வடக்கு கிழக்கு மாகாணத்தை சேர்ந்த 278 பேர் அங்கத்தவர்களாக உள்ளனர் அவர்களில் பெரும்பாலானோர் யுத்தம் மற்றும் விபத்துக்கள் காரணமாக கண் பார்வையை இழந்தவர்கள். இவர்களில் 68 பேர் முற்றாக பார்வை இழந்தவர்கள். ஏனையோர் பார்வை குறைபாடு உடையவர்கள் , ஒற்றை கண் பார்வை உடையவர்கள் என உள்ளனர். 

எமக்கு வங்கிகள் கடன் தர மறுக்கின்றார்கள். கண் பார்வை இல்லாமல் எவ்வாறு தொழில் செய்து கடனை கட்ட போறீர்கள் என கேட்டு கடன் தர மறுக்கின்றார்கள். 

தொழில் வழங்குநர்கள் எமக்கு தொழில் தர மறுக்கின்றார்கள். அதற்கு இன்னுமொரு காரணம் நாம், விடுதலைப்புலிகளின் நவம் அறிவுக் கூடத்தில் பயின்றமையால் எம்மை தொழிலில் இணைத்தால் . தமக்கு எதாவது பிரச்சனைகள் வரலாம் என அஞ்சுகின்றார்கள்.

இவ்வாறான சூழலில் நிரந்தரமாக பார்வையற்றவர்களால் எவ்வித தொழிலும் செய்ய முடியாத காரணத்தால் , அவர்களின் வாழ்வாதாரமாக அவர்களின் வங்கி கணக்கில் ஒரு தொகையினை நிரந்தர வைப்பாக வைப்பில் இடும் போது அதன் மூலம் கிடைக்கும் வட்டி அவர்களின் வருமானமாக இருக்கும். அதற்கான ஏற்பாடுகளை செய்யும் முயற்சியில் தற்போது நாம் ஈடுபட்டு வருகின்றோம். 

கணனி கற்ற எமக்கு தொழில் வாய்ப்பு இல்லை. 

நவம் அறிவுக் கூடத்தில் எமக்கு அவுஸ்ரேலியாவில் இருந்து ஆசிரியர்கள் வந்து கற்பித்தனர். அவர்களிடம் நாம் கற்று தேர்ந்தோம். 

அதன் அடிப்படையில் பார்வையற்றோருக்கான தொழிநுட்ப கல்லூரி ஒன்றினை ஆரம்பித்து கணனி சம்பந்தமான கற்கை நெறிகளை கற்பித்தோம். 

க.பொ.த உயர்தரத்தில் சித்தி அடைந்து பல்கலைக்கழகம் செல்லவுள்ளோர் , பல்கலைக்கழக கல்வியை கற்று முடித்து தொழில் வாய்ப்புக்காக காத்திருப்போர் மற்றும் ஏனையவர்கள் என மூன்று பிரிவுகளாக பிரித்து அவர்களுக்கு 6 மாத கால கற்கை நெறியினை கற்பித்தோம். 

கணனியை கற்கும் போது விசைப்பலகை (கீ – போர்ட்) கைக்கு படிமனாக வந்து விடும். அதன் பின்னர் திரையில் உள்ளதனை வாசித்து ஒலி வடிவில் கூற கூடிய மென் பொருட்கள் உள்ளன. அதன் ஊடாக நாம் தட்டச்சு செய்ய முடியும். 

எங்களால் வேகமாக எழுத்து பிழைகள் இன்றி தட்டச்சு செய்ய முடியும். நாம் நினைப்பதனை அல்லது எமக்கு சொல்வதனை தட்டச்சு செய்ய முடியும். ஆனால் ஒரு கடிதத்தை தந்து அதனை தட்டச்சு செய்து தருமாறு கோரினால் எம்மால் அதனை வாசிக்க முடியாது.  ஆனாலும் ஒருவர் எமக்கு அருகில் இருந்து வாசித்தால் நாம் தட்டச்சு செய்வோம். புத்தங்கள் கடிதங்களை தட்டச்சு செய்வதற்கு எமது பார்வை உள்ள ஒருவரின் உதவி தேவை என்பதனால் எமக்கு அந்த வேலைகளை பெற்று கொள்ள முடியவில்லை. 

பார்வை உள்ளவர்கள் எம்மை தொழிலில் ஏமாற்றுகிறார்கள். 

எமது வாழ்வாதாரமாக பண்ணை ஒன்றினை அமைத்தோம். அங்கு வேலை செய்வதற்கு பார்வையற்றவர்களான  எம்மால் முடியாது. அதனால் பார்வை உள்ளவரை வேலைக்கு அமர்த்தினோம். அவருக்கு மாதாந்தம் 30 ஆயிரம் வரை சம்பளமும் கொடுத்தோம். 

அவர் ஒழுங்காக வேலை செய்கிறாரா ? என்பதனை எங்களால் அறிய முடியாது இருந்தமையால் அவர் எங்களை ஏமாற்றி விட்டார். 

தற்போது நாம் ஒரு எண்ணெய் ஆலை ஒன்றினை நடாத்தி வருகிறோம். அங்கும் பணியாளராக பார்வை உள்ள ஒருத்தரே  உள்ளார். அவரை வைத்தே ஆலையை இயக்கி வருகிறோம். 

பார்வை அற்றவர்கள் இவ்வாறான தொழில் முயற்சிகளில் ஈடுபடும் போது பார்வை உள்ளவர்கள் பற்றோடு வேலை செய்ய கூடியவர்களை நாம் எதிர்பார்க்கின்றோம். என்றனர். —

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More