சீனா எப்போதும் இலங்கையின் அரசியல் நிபந்தனைகளுக்கு அமைய எந்தவித உதவிகளையும் செய்யவில்லை. அவ்வாறான நிலைப்பாட்டை சீனா ஒருபோதும் கொண்டிருக்காது என சீனாவின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஜாவோ லிஜான் அந்நாட்டு செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் முதலீடுகளை முன்னெடுப்பது மற்றும் நிதி உதவிகளை செய்வது தொடர்பான விடயங்களில் நாங்கள் ஒருபோதும் அரசியல் சுயநலத்துடன் செயற்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார் .
கடன் நிதி உதவிகள் விடயத்தில் இலங்கை வெளிவிவகார அமைச்சரின் கருத்து வரவேற்கதக்கது, சீனாவின் உதவிகளை வரவேற்பதாகவும், தாம் இரு தரப்பும் நட்பு நாடுகள் என அவர் தெரிவித்துள்ள கருத்தானது ஆரோக்கியமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.குறிப்பாக இலங்கையில் சீனாவின் கடன்பொறி என பயன்படுத்தப்படும் சொல்லாடலை வலுவாக நி ராகரிக்கும் கருத்து இதுவாகும்.
தற்போது இலங்கை பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து வருகின்றது. இலங்கை எதிர்கொண்டுள்ள நெருக்கடிகள் மற்றும் சவால்களை சீனா முழுமையாக புரிந்துகொண்டுள்ளது. இந்த பிரச்சினைகளை உரிய விதத்தில் தீர்ப்பது குறித்து உரிய நிதி அமைப்புகளிற்கு சீன ஒத்துழைப்புகளை வழங்குகின்றது. அத்துடன் உறுதியான தீர்வை பெற்றுக்கொடுக்க சீனாவும் இணைந்து பணியாற்றுகிறது.
மேலும் தங்கள் சக்திக்கு உட்பட்ட வகையில் தாங்கள் இலங்கையின் சமூக பொருளாதார அபிவிருத்திக்கு உதவி வழங்கி வந்துள்ளதாகவும், சீனா தொடர்ந்தும் இலங்கையுடன் நெருக்கமான நட்புறவை கையாண்டு ஒத்துழைப்புக்களை வழங்கும் எனவும், சீனாவின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஜாவோ லிஜான் அந்நாட்டு செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.