கோவை ஈசா யோகா மையத்திற்கு பயிற்சிக்காக சென்ற சுபஸ்ரீ என்ற பெண் மர்மமான முறையில் மரணமடைந்து இருக்கும் நிலையில் தமிழ்நாடு அரசு உரிய விசாரணை மேற்கொள்ள வலியுறுத்தி மாதர் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு இயக்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டன.
திருப்பூர் மாவட்டம் அவினாசியை சேர்ந்த பழனிகுமார் என்பவரின் மனைவியான 34 வயதுடைய சுபஸ்ரீ திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்து உள்ளார். இவர்களுக்கு 11 வயதில் ஒரு மகள் உள்ள நிலையில், கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக சுபஸ்ரீ ஜக்கி வாசுதேவின் ஈஷா யோகா மையத்துக்கு சென்று யோகா பயிற்சி பெற்று வந்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த டிசம்பர் மாதம் 18 ஆம் தேதி காலை மீண்டும் யோகா பயிற்சியில் கலந்துகொள்ள ஈஷா யோகா மையத்துக்கு சென்ற சுபஸ்ரீயை பயிற்சி முடிவில் அழைத்துச்செல்ல கணவர் சென்ற போது அவர் காணாமல் போயிருந்தார்.
அங்கு பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து பார்த்த போது, வாடகை காரில் அவர் ஏறி சென்றதும், இருட்டுப்பள்ளம் அருகே இறங்கிச் சென்றதும் தெரியவந்து.
இது குறித்து காவல் நிலையத்தில் முறையிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் மேற்கொண்டு நடத்தப்பட்ட விசாரணையில் அதே பகுதியில் பெண் ஒருவர் ஓடிச்செல்வதை போன்ற காட்சி பதிவாகி இருந்தது. இந்த நிலையில் நடத்தப்பட்ட தேடுதலைத் தொடர்ந்து செம்மேடு பகுதில் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக தமிழக அரசு தகுந்த விசாரணை நடத்த வேண்டும் என கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக மாதர் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு இயக்கங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஈஷாவிலிருந்து மாயமான பெண் சடலமாக மீட்கப்பட்ட விவகாரத்தில், காவல்துறை அவசர அவசரமாக பிரேத பரிசோதனை முடித்து உடலை ஒப்படைத்து உள்ளது.
அடுத்தடுத்து ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள் மாவட்ட நிர்வாகம் மற்ரும் காவல்துறையால் மறைக்கப்படுகிறதோ என்கிற ஐயம் எழுவதாகவும், இந்த விசாரணைக்கு அரசு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் எனவும் கோஷங்களை எழுப்பியுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ஈஷா யோகா மையத்தை நடாத்திவரும் சத்குரு ஜக்கி வாசுதேவ் (Sadhguru Jaggi Vasudev) ஞானியாகவும் யோகியாகவும் குருவாகவும் போற்றப்படுவது குறிப்பிடத்தக்கது.