வலிகாமம் வடக்கு, பகுதியில் உள்ள தனியார் காணிகளை விடுவிக்குமாறு கோரி இரண்டாம் நாளாக இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை பலாலி அண்ரணிபுரம் பகுதியில் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றது.
இந்த கவனயீர்ப்பு போராட்டத்தினை வலி வடக்கு மக்களுடன் இணைந்து, வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு ஏற்பாடு செய்திருந்தது.
பலாலி அண்ரணிபுரம் பகுதியில் இராணுவ முட்கம்பி வேலிக்கு முன்னால் கொட்டகை அமைத்து மக்கள் அமைதியான முறையில் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.
இதன் போது கருத்து தெரிவிக்கையில்,
கடந்த 33 வருடங்களாக தான் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு வேறு இடங்களில் வசித்து வருகின்றோம். எங்கள் பூர்வீக இடங்களை 33 வருடங்களாக இராணுவம் கையகப்படுத்தி வைத்திருக்கின்றது.
யுத்தம் முடிவடைந்து 10 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. தொடர்ந்து இராணுவம் உயர் பாதுகாப்பு வலையம் என்ற போர்வையில் எங்களுடைய காணிகளை வைத்திருக்கின்றது.
நாங்கள் வாடகைக்கும், அயலவர்களின் கோடிகளிலுமே வசித்து வருகின்றோம். எனவே எமது காணிகளை விடுவிக்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றனர்.