தேர்தல்கள் ஆணைக்குழுவில் கோரம் (உறுப்பினர்களின் எண்ணிக்கை) இன்றி எடுக்கப்படும் எந்தவொரு தீர்மானமும் செல்லுப்படியாகாது எனத் தெரிவித்துள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் கலாநிதி பிரதிபா மஹாநாம ஹேவா, தேர்தல் திகதியை ஊடகங்களுக்கு அறிவிப்பது அல்ல, அந்தத் திகதியை வர்த்தமானியில் வெளியிடுவதே சட்டமாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மார்ச் மாதம் 9ஆம் திகதியன்று நடத்தப்படும் என ஊடக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. எனினும், தேர்தலுக்கான திகதி குறிக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இன்னும் வெளியிடப்படவில்லை.
தேர்தல் திகதி குறிக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியிருந்தால். அதற்கு ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் எத்தனை பேர் தங்களுடைய விருப்பத்தை தெரிவித்தனர் என்பது தொடர்பில் மக்களுக்கு தெளிவான விளக்கத்தை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவித்துள்ளார்.
தேர்தல் திகதியை ஊடகங்களுக்கு அறிவிப்பது அல்ல, அந்தத் திகதியை குறிப்பிட்டு வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதே சட்டமாகும் என கூட்டிக்காட்டியுள்ளார்.
அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டு, அரசியலமைப்பு பேரவை எதிர்வரும் 25ஆம் திகதி கூடவிருக்கின்றது. இந்நிலையில், தேர்தல் ஆணைக்குழுவும் நெருக்கடியான சூழலில் இருப்பதாக கலாநிதி பிரதிபா மஹாநாம ஹேவா கூறியுள்ளார்.
உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனு கோரும் வர்த்தமானியில் தேர்தல்கள் ஆணைக்குழுவில் அங்கம் வகிக்கும் ஐந்து பேரினதும் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், தேர்தலுக்கான திகதியை நிர்ணயம் செய்வதற்கும் அவ்வாறான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமென பிரதிபா மஹாநாம ஹேவா குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் திகதியை தீர்மானித்தல் போன்ற முக்கிய பணிகளுக்கு முழு ஆணைக்குழுவும் தேவை என தெரிவித்த மஹாநாம ஹேவா, தேர்தல் திகதி வர்த்தமானியில் அறிவிக்கப்படவில்லை எனக் கூறுவதன் மூலம் மறைமுகமாக வெளிப்படுத்துவது என்ன எனவும் கேள்வி எழுப்பினார்.