231
விடுதலைப்புலிகளை மீள் உருவாக்க முனைந்தார் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பளை வைத்தியசாலை பொறுப்பதிகாரி வைத்திய கலாநிதி சின்னையா சிவரூபன் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி மேல் நீதிமன்றில் இன்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற வழக்கு விசாரணைகளை தொடர்ந்து வைத்தியர் சிவரூபனை பிணையில் செல்ல நீதிமன்று அனுமதித்தது.
கடந்த 2019ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 18ஆம் திகதி இராணுவ புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட வைத்தியர் சி. சிவரூபன் பின்னர் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
வைத்தியரிடம் இருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு , பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வைத்தியருடன் தொடர்பினை பேணினார்கள் என குற்றம் சாட்டி புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்ட விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளிகளையும் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்கள் நீண்டகாலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்ட பின்னர் , முன்னாள் போராளிகளை விடுவித்தனர்.
இருந்த போதிலும் வைத்தியரை நீண்ட காலம் தடுத்து வைத்து விசாரணைகளுக்கு உட்படுத்திய பின்னர் , கிளிநொச்சி மேல் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்து வைத்தியரை மன்றில் முற்படுத்தினர்
அதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணைகளின் அடிப்படையில் , இன்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற வழக்கு விசாரணைகளை தொடர்ந்து வைத்தியரை பிணையில் செல்ல நீதிமன்று அனுமதித்தது.
Spread the love