187
வீதி விபத்தில் சிக்கி , சிகிச்சை பலனின்றி உயிரிழந்த யாழ்.மாநகர சபை உறுப்பினர் மூத்த சட்டத்தரணி மு. றெமீடியஸ்க்கு அஞ்சலி செலுத்தும் முகமாக மாநகர சபை கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டதுடன், மாநகர சபை உறுப்பினர்கள் , உத்தியோகஸ்தர்கள், ஊழியர்கள் இரண்டு நிமிட அக வணக்கம் செலுத்தினர்.
அதேவேளை சட்டத்தரணி மு.றெமீடியஸின் இறுதி கிரியைகள் நாளைய தினம் புதன்கிழமை பிரதான வீதி , யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது வீட்டில் நடைபெற்று , மாலை 3 மணியளவில் பாசையூர் அந்தோனியார் தேவாலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு , யாழ்ப்பாணம் சென் மேரி சேமக்காலையில் உடலம் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
யாழ்.மாநகர சபை உறுப்பினரும் பிரபல மூத்த சட்டத்தரணியுமான மு. றெமீடியஸ் கடந்த 7ஆம் திகதி சிறுப்பிட்டி பகுதியில் மோட்டார் சைக்கிளில் யணித்துக்கொண்டிருந்த வேளை நாய் ஒன்றுடன் மோதுண்டு விபத்துக்கு உள்ளான நிலையில் , யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த சனிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதேவேளை யாழில் தெருநாய்கள் கட்டாக்காலி மாடுகளை மாநகரசபை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டுமென ஈழமக்கள் ஜனநாயக கட்சியின்யாழ் மாநகர சபை உறுப்பினர் து,இளங்கோ யாழ் மாநகர சபை அமர்வில் கோரிக்கை விடுத்திருந்தார்.
இன்று யாழ்ப்பாண மாநகர சபையின் 2023 ம் ஆண்டு பாதீடு சபையில் சமர்ப்பிப்பதற்கான விசேட அமர்வு முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் தலைமையில் இடம் பெற்றது . குறித்த அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போது ஈபிடிபி உறுப்பினர் இளங்கோ மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்திருந்தார்
நாய்களை கட்டுப்படுத்துங்கள் வீதிகளில் திரிகின்ற நாய்களை யாழ் மாநகர சபை கட்டுப்படுத்த வேண்டும் அத்தோடு மாடுகளையும் கட்டுப்படுத்த வேண்டும் இந்த விடயத்தில் உறுப்பினர்கள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.
அதேவேளை யாழ்.மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி மு. றெமீடியஸ் , மோட்டார் சைக்கிளில் பயணித்த போது , வீதியின் குறுக்கே ஓடிய நாயுடன் மோதுண்டு விபத்துக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love