ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க தயாராக இருப்பதாக தெரிவித்த அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன, கட்சி தீர்மானம் எடுக்கத் தவறினால் குழுவாக ஆதரவளிக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நேற்று (06.04.23) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர்,
யார் என்ன சொன்னாலும் ஹர்ஷ டி சில்வா போன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க தயாராக உள்ளனர் எனவும், பலர் ஜனாதிபதியுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறார்கள் என்வும் அவருடன் தேர்தலில் போட்டியிட சற்று தயக்கம் காட்டுகின்றனர் என்றும் குறிப்பிட்டார்.
த்துடன் ஐக்கிய மக்கள் சக்தி கொள்கை வேறுபாடுகளால் தனித்துச் சென்றது அல்ல எனவும் ரணில் விக்கிரமசிங்கவின் முடிவெடுக்கும் பாணியில் மகிழ்ச்சியடையாத காரணத்தால் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதி நாட்டை சிறந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளார் என்ற கருத்து யதார்த்தமானது என குறிப்பிட்ட அவர், சுகாதாரத் துறை நெருக்கடி குறித்து ஜனாதிபதியுடன் பேசியுள்ளதாகவும் அதை சரி செய்யவதற்கான நடவடிக்கையை மேற்கொள்வதாக அவர் உறுதியளித்துள்ளதாகவும் ராஜித சேனாரட்ண கூறியுள்ளார்.
உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், இந்தச் சட்டத்தில் சாதகமான அம்சங்கள் இருப்பதாகவும் எனினும் சில திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.