Home இலங்கை மேலும் ஒரு கோவிலுக்கு ஆபத்து? நிலாந்தன்.

மேலும் ஒரு கோவிலுக்கு ஆபத்து? நிலாந்தன்.

by admin

கடந்த திங்கட்கிழமை பங்குனித் திங்களன்று நெடுங்கேணியில் உள்ள நொச்சிக்குளம் அம்மன் கோவிலை  வழிபடச் சென்ற பக்தர்களைத்  தொல்லியல் திணைக்களம் தடுத்து நிறுத்தியதாக செய்திகள் வெளியாகின. பக்தர்களைப் பொறுத்தவரை அது கோவில். தொல்லியல் திணைக்களமோ அதை ஒரு தொல்லியல் அமைவிடமாக கருதுகிறது. நாட்டின் தொல்லியல் சட்டங்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை விடவும் இறுக்கமானவை என்று நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறுகிறார்.

ஒரு மக்கள் கூட்டத்தால் தொடர்ச்சியாக வழிபடப்படும் ஒரிடத்தை தொல்லியல் திணைக்களம் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது என்றால் முதலில் அந்த வழிபாட்டிடத்தை நிர்வகிக்கும் தனிநபர் அல்லது நிர்வாக கட்டமைப்பிடம் அனுமதி பெறப்பட வேண்டும் என்று துறைசார் வல்லுனர்கள் கூறுகிறார்கள். அழிவடையும் நிலையில் உள்ள ஒரு மரபுரிமை சின்னத்தை தொல்லியல் திணைக்களம் பொறுப்பேற்பது வேறு,மக்களால் தொடர்ந்து வழிபடப்படும் ஓரிடத்தை பொறுப்பெடுப்பது வேறு என்றும் அவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.

பொலநறுவையில் காணப்படும் பாழடைந்த பல சிவாலயங்களில் இரண்டாவது சிவனாலயம் என்று அழைக்கப்படுவது இப்பொழுது பக்தர்களால் வழிபடப்படுகிறது. அதற்கு பொறுப்பாக ஒரு சிங்கள பூசாரி இருக்கிறார்.தமிழ் சிங்கள பக்தர்கள் அங்கே போவதுண்டு.அது தொல்லியல் விதிகளுக்கு முரணானது என்றாலும் அங்கே ஒரு நெகிழ்ச்சிப் போக்கு கடைப்பிடிக்கப்படுகிறது என்பதையும் துறைசார் புலமையாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.ஒரு மக்கள் கூட்டத்தின் வழிபாட்டு உரிமையும் தொல்லியல் திணைக்களத்தின் அதிகாரமும் முட்டும் இடங்கள் இவை.

இலங்கைத் தீவைப் பொறுத்தவரை தொல்லியல் திணைக்களத்தை தமிழ் மக்கள் ஒரு நட்பான திணைக்களமாகப் பார்க்கவில்லை.தமிழ் மரபுரிமைச்  சொத்துக்களை தொல்லியல் திணைக்களம் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது என்பது சிங்கள பௌத்த மயமாக்கலின் ஒரு பகுதி என்று தமிழ் மக்கள் சந்தேகிக்கின்றார்கள்.குருந்தூர் மலையிலும் வெடுக்குநாறி மலையிலும் விவகாரம் அப்படித்தான் காணப்படுகிறது.கன்னியா வெந்நீர் ஊற்றிலும் நெடுந்தீவில் வெடியரசன் கோட்டையிலும் நிலைமை அப்படித்தான்.

தொல்லியல் திணைக்களத்தால் பராமரிக்கப்படும் சிதைந்த அல்லது சிதைந்து செல்லும் ஒரு மரபுரிமைச் சொத்தை பக்தர்கள் அணுகும் பொழுது அங்கே துறைசார் பாதுகாப்பு ஏற்பாடுகள் என்ற வரையறைகள் இருப்பது நியாயமானது.ஆனால் இலங்கைத்தீவில் நிலைமை அவ்வாறல்ல.தமிழ் மக்கள், தொல்லியல் திணைக்களத்தை சிங்களபௌத்த மயமாக்கலின் கருவியாகவே பார்க்கிறார்கள்.

கலாநிதி.யூட்.பெர்னாண்டோ,பேராசிரியர்.நிரா விக்கிரமசிங்க  போன்ற சிங்கள  புலமையாளர்களே இலங்கைத்தீவின் தொல்லியல் துறையைக் கடுமையாக விமர்சித்துள்ளார்கள்.கலாநிதி.யூட்.பெர்னாண்டோ “மரபுரிமையும் தேசிய வாதமும்–சிறீலங்காவின் விஷம்” என்ற தலைப்பில் 2015மார்ச் மாதம் “கொழும்பு ரெலிகிராப்”பில்  மிக விரிவான ஒரு கட்டுரையை எழுதியுள்ளார்..(https://www.colombotelegraph.com/index.php/heritage-nationalism-a-bane-of-sri)

தொல்லியல் திணைக்களம் மட்டுமல்ல மத்திய அரசாங்கத்தின் நேரடிக்  கட்டுப்பாட்டின் கீழ்வரும் எல்லாத் திணைக்களங்களுமே சிங்கள பௌத்த அரசுக் கொள்கையின் உபகரணங்கள்தான்.முப்படைகளும் உட்பட நீதிபரிபாலனக்  கட்டமைப்பு,போலீஸ் திணைக்களம் உட்பட அரசுத் திணைக்களங்கள் அனைத்தும் அரசின் உபகரணங்கள்தான்.அரசின் கொள்கை எதுவோ அதை அவை அமுல்படுத்தும்.அவற்றுக்கெல்லாம் சுயாதீனம் இருப்பதாக கற்பிக்கப்படுவது ஒரு மாயை.எனவே அரசுக் கொள்கை எதுவோ அதைத்தான் அரச உபகரணங்கள் முன்னெடுக்கும்.இப்பொழுது விடயம் தெளிவாக தெரிகிறது அல்லவா?அரசின் கொள்கை சிங்கள பௌத்த மயமாக்கல் என்றால் திணைக்களங்கள் அதைத்தான் அமுல்படுத்தும்.

நாடு ஐ.எம்.எஃப்பின் நிபந்தனைகளுக்கு உட்பட்டதன் விளைவாக சிங்களமக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கக்கூடிய அதிருப்தி,கோபம் என்பவற்றைத் திசை திருப்புவதற்கு தமிழ்மக்கள் மீதான தொல்லியல் ஆக்கிரமிப்பை தூண்டி விட்டால் போதும்.சிங்களப் பொதுஜனத்தின் கோபத்தை இலகுவாகத் திசைதிருப்பலாம்.அரசாங்கத்தின் இந்தக் கொள்கையின் விளைவாகத்தான் அண்மைக்காலமாக தமிழ் மக்களின் வழிபாட்டுரிமை,மரபுரிமை போன்றன தீவிரமாக கேள்விக்கு உள்ளாக்கப்படுகின்றன.அதற்கு எதிராகத் தமிழ் மக்கள் ஆங்காங்கே எதிர்ப்பைக் காட்டி வருகிறார்கள்.

உலகில் பெரும்பாலான நாடுகளில் தொல்லியல் துறை எனப்படுவது தனது நாட்டின் பெருமைமிகு மரபுரிமைச் சொத்துக்கள் என்று கருதப்படும் இடங்களை பாதுகாக்கின்றது.அதனை அவர்கள் இனரீதியாகவோ மதரீதியாகவோ பார்ப்பதில்லை.பதிலாக அதைத் தமது நாட்டின் மரபுரிமைச் சொத்து என்றுதான் பார்க்கிறார்கள்.அந்த அடிப்படையில் அதைப் பாதுகாக்கின்றார்கள் என்பதனை வரலாற்று அறிஞர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

உதாரணமாக இந்திய நாகரீகத்தின் தொட்டில்களில் ஒன்றாகக் கருதப்படும் மொகஞ்சதாரோ ஹரப்பா பாகிஸ்தானின் எல்லைக்குள்தான் உண்டு.ஆனால் இஸ்லாமிய நாடாகிய பாகிஸ்தான் அந்த அகழ்வாராய்ச்சிப் பிரதேசத்தை தனது மரபுரிமை சொத்தாகப் பேணிப் பாதுகாக்கின்றது.உலகின் மிகப்பெரிய முஸ்லிம் சனத்தொகை இந்தோனேசியாவில் உண்டு.அங்கே காணப்படும் மிகப்பெரிய புத்தர் சிலைகளை அங்குள்ள இஸ்லாமிய அரசு பாதுகாக்கின்றது.

ஆனால் இலங்கைத் தீவிலோ தொல்லியல் துறை எனப்படுவது ஆப்கானின் தாலிபான்களைப் போல செயல்படுகின்றதா என்ற கேள்வி தமிழர்கள் மத்தியில் உண்டு.ஆப்கானில் உள்ள பிரம்மாண்டமான புத்தர் சிலைகளை தாலிபான்கள் சேதப்படுத்தியதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். இலங்கைத் தீவின் அரசாட்சி பாரம்பரியத்தைப் பொறுத்தவரை இது ஒரு வழமைதான். 2009க்குமுன் அரச படைகள் சிங்களமயமாக்கலை போர் என்ற வடிவத்தில் முன்னெடுத்தன. 2009க்குப்பின் திணைக்களங்கள் அதனை வேறுவடிவத்தில் முன்னெடுக்கின்றன.அவ்வளவுதான் வித்தியாசம்.சிங்கள பௌத்த மயமாக்கல் 2009க்கு முன்பு முழு வேகத்தில் இடம்பெற முடியவில்லை. ஏனென்றால் போர் இருந்தது.ஆனால் இப்பொழுது முழு நாடுமே வெற்றி கொள்ளப்பட்ட நிலம். எனவே எங்கெல்லாம் சிங்கள பௌத்த மயமாக்கலைச் செய்யலாமோ அங்கெல்லாம் செய்யலாம்.திணைக்களங்கள் மட்டுமல்ல,மாகாண ஆளுநர்களை வைத்தும் செய்யலாம்.மாகாண நிர்வாகம் இயங்காத ஓர் அரசியற் சூழலில்,உள்ளூராட்சி சபைகள் இயங்காத ஓர் அரசியற் சூழலில்,சிங்களபௌத்த மயமாக்கலை இலகுவாக முன்னெடுக்கலாம். அதுதான் இப்பொழுது நடக்கிறது.

இந்த சிங்களபௌத்த மயமாக்கலைத் தடுப்பதற்கு தமிழ்மக்கள் மத்தியில் வலிமையான எதிர்ப்பு இல்லை.தமிழ்மக்கள் காட்டி வரும் எதிர்ப்புக்கள் அதைத் தடுக்க போதுமானவை அல்ல.அவ்வாறு எதிர்க்க முடியாத ஒரு சூழலில்,அல்லது எதிர்ப்பைக் காட்டவல்ல வலிமையான கட்சிகளின் கூட்டோ மக்கள் இயக்கமோ இல்லாத ஒரு வெற்றிடத்தில்,தமிழ் மக்களில் ஒரு பகுதியினர் இந்தியாவைத் தஞ்சம் அடைகின்றார்கள்.இந்துக்களின் மரபுரிமைச் சின்னங்கள் அழிக்கப்படுவதைச் சுட்டிக்காட்டி பாரதிய ஜனதா அரசாங்கத்தின் பாதுகாப்பைப் பெற முயற்சிக்கின்றார்கள்.

இந்தியாவை ஆளும் பாரதிய ஜனதாக் கட்சி இந்த விடயத்தில் இதுவரையிலும் உத்தியோகபூர்வமாக கருத்து தெரிவித்ததாக தெரியவில்லை.இந்திய அரசாங்கத்தின் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இரு நாடுகளுக்குமிடையிலான உறவு பொறுத்து”தண்ணீரைவிட ரத்தம் அடர்த்தியானது” என்று கூறுகிறார்.இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவரான மிலிந்த மொறகொட சிங்களபௌத்த பாரம்பரியத்திற்கும் இந்தியாவுக்கும் இடையிலே எப்படிப் பிணைப்புகளை ஏற்படுத்தலாம் என்று சிந்தித்து உழைக்கிறார்.அரசுக்கும் அரசுக்கும் இடையிலான கட்டமைப்புசார் உறவுகள் என்று பார்த்தால்,இந்த விடயத்தில் சிங்களபௌத்த அரசுக் கட்டமைப்புக்கும் இந்திய அரசுக் கட்டமைப்புக்கும் இடையே ஒப்பீட்டளவில் நெருக்கமும் இடையூடாட்டமும் அதிகம்.

அவ்வாறான கட்டமைப்புசார் உறவுகள் தமிழ் மக்களுக்கு இல்லை.இந்த வெற்றிடத்தில்தான் தமிழ்மக்கள் நாட்டுக்குள்ளேயும் நாட்டுக்கு வெளியேயும் உதிரிகளாக பாரதிய ஜனதா அரசாங்கத்தை அணுகிவருகிறார்கள்.ஆனால் இந்த அணுகுமுறையின் விளைவாக இதுவரையிலும் இந்தியா தமிழ் மக்களுக்கு பரிந்துரைக்கும் தீர்வு 13வது திருத்தத்தை கடக்கவில்லை. 13 வது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்துமாறு இலங்கை மீது நிர்ணயகரமான விதங்களில் அழுத்தத்தை பிரயோகிக்கவும் இந்தியாவால் முடியவில்லை.கடந்த சில தசாப்தங்களாக இலங்கை பொறுத்து இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை தோல்வியடைந்து விட்டது என்பதே நடைமுறை உண்மையாகும். அம்பாந்தோட்டையில் சீனா 99ஆண்டு கால குத்தகைக்கு குந்தியிருக்கின்றது. கொழும்புத் துறைமுகத்தில் சீனப் பட்டினம் சீனாவின் செல்வாக்குக்குள்தான் இருக்கும்.இது இந்தியாவின் செல்வாக்கு மண்டலம். இந்த மண்டலத்துக்குள் ஒரு வெளிப் பேரரசு இப்படி நிரந்தரமாக வந்து குந்தியது என்பது இந்திய வெளியுறவு அணுகுமுறைகளின் தோல்விதான்.இப்படிப்பட்டதோர் வெளியுறவுச் சூழலில் இந்துத் தமிழர்களை இந்தியா காக்க வேண்டும் என்று கேட்கும் குரல் அண்மை காலங்களில் வலிமையடைந்து வருகிறது.

தமிழ் மக்கள் மிக நீண்ட கடல் எல்லையைக் கொண்டவர்கள். தமிழ் மக்களின் ஆதரவைப் பெற்ற சக்திகள் அக்கடல் எல்லையின் மீது ஆதிக்கம் செலுத்த முடியும்.தனது செல்வாக்கு மண்டலத்தில் நிரந்தரமாகத் தரித்து நிற்க எத்தனிக்கும் சீனாவை அகற்றுவதற்கு இந்தியாவுக்கு தமிழ் மக்கள் தேவை. அதேபோல சிங்கள பௌத்த மயமாக்கலை தடுப்பதற்கு தமிழ் மக்களுக்கு இந்தியா தேவை.ராஜதந்திரம் இனப்படுவது தேவைகளின் கலைதான். நீதி நியாயத்தின் கலை அல்ல.

ஒரு வரலாற்று அறிஞர் சுட்டிக்காட்டியது போல, பாபர் மசூதியை உடைத்த ஒரு கட்சியிடம் உடைக்கப்படும் சிவனாலயங்களுக்காக நீதி கேட்பதில் அறநெறி சார்ந்த முரண் உண்டு. ஆனால் ராஜதந்திரத்தில் அறமெல்லாம் கிடையாது. நீதி நியாயங்கள் கிடையாது. நலன்சார் உறவுகளுக்கு இடையிலான பேரம்தான் உண்டு.நீதிமான்களிடந்தான் தமிழ்மக்கள் நீதியைக் கேட்கலாம் என்றால் இந்தக் கேடுகெட்ட பூமியில் தமிழ்மக்கள் யாரிடமும் நீதியைக் கேட்க முடியாது.எனவே இந்தியாவோடு தமிழ்மக்கள் பரஸ்பரம் நலன் சார்ந்த ஒரு புரிந்துணர்வுக்கு போக வேண்டும்.இந்தியாவின் பாதுகாப்பு வியூகத்தில் தமிழ் மக்கள் எப்படிப் பங்காளிகள் ஆவது என்று சிந்திக்க வேண்டும்.அதற்கு தமிழ் கட்சிகளிடம் பொருத்தமான வெளியுறவுத் தரிசனங்கள் இருக்கவேண்டும். வெளியுறவுக் கட்டமைப்புகள் இருக்க வேண்டும்.நாளை யாழ்ப்பாணத்தில் நடக்கவிருக்கும் உணவுதவிர்ப்புப் போராட்டம் அவசியம்.அதேயளவுக்கு அவசியம் பொருத்தமான வெளியுறவுக் கூட்டுக்கள்.

Spread the love
 
 
      

Related News

1 comment

EL April 16, 2023 - 6:33 pm

1949 முதல் இன்று வரை அழிக்கப்பட்ட தமிழ்க் கோயில்களின் பெயர்கள், அழிக்கப்பட்ட இடம், அழிக்கப்பட்ட தேதிகள், அழிப்பதற்கு முன்னும் பின்னும் உள்ள கோயில்களின் புகைப்படங்கள் என்பவற்றை முறையாக வரிசைப்படுத்தி, பட்டியலிட்டு, உலகத் தலைவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி, அழிவைத் தடுத்து, அழிக்கப்பட்ட கோயில்களை மீண்டும் கட்ட வேண்டும்.
இதை மக்களுக்கு சேவை செய்ய விரும்பி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் தலைவர்கள் செய்ய வேண்டும்.

Reply

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More