239
யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் பிரதேச சபைக்கு சொந்தமான வீதியையும் , கமநல சேவைகள் திணைக்களத்திற்கு சொந்தமான குளத்தினையும் சட்ட விரோதமான முறையில் தனி நபர் ஒருவர் அபகரித்து எல்லை வேலிகளை போட்டு , அவ்வீதி ஊடான போக்குவரத்தையும் தடை செய்து இருந்தார். குறித்த நபரின் ஆக்கிரமிப்பில் இருந்து வீதியை மீட்டு தர கோரி அப்பகுதி மக்கள் சாவகச்சேரி பிரதேச சபை முன்பாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் பிரதேச சபை செயலாளர் , கொடிகாமம் காவல் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் பேச்சு நடாத்திய போதிலும், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், தமக்கு வீதியை மீட்டு தரும் வரையில் போராட்டம் தொடரும் என அறிவித்தனர்.
அதனை அடுத்து குறித்த வீதிக்கு போராட்டக்காரர்கள் காவல்துறையினர் பிரதேச சபை உத்தியோகஸ்தர்கள் சென்று தனியாரால் அபகரிக்கப்பட்டு போடப்பட்டு இருந்த வேலியை அகற்றி அவ்வீதி ஊடான போக்குவரத்திற்க்கு வீதியை திறந்து விட்டனர். அதேவேளை குறித்த தனிநபர் அந்த வீதியையும் , கமநல சேவைகள் திணைக்களத்திற்கு சொந்தமான குளத்தின் ஒரு பகுதியையும் அபகரித்து 2020 ஆம் ஆண்டு கால பகுதியில் வேலி அடைத்து அபகரித்துள்ளார்.
அது தொடர்பில் அப்பகுதி மக்களால் பிரதேச சபையிடம் முறையிட்டதை அடுத்து பிரதேச சபையினர் அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து ஆவணங்களை பரிசீலித்து , குறித்த வீதி பிரதேச சபைக்கு சொந்தமானது என தெரிவித்து வேலிகளை அகற்றி அவ்வீதி ஊடாக போக்குவரத்து செய்வதற்க்கு வீதியை திறந்து விட்டு இருந்தனர்.
அவ்வாறு வீதி திறந்து விடப்பட்டு ஒரு சில வாரங்களிலையே மீண்டும் அவ்வீதியையும் குளத்தையும் அபகரித்து வேலி அமைத்துள்ளார். இந்நிலையிலையே மக்கள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை போராட்டம் செய்து மீண்டும் வீதியை மீட்டுள்ளனர்.
Spread the love