Home இந்தியா கர்நாடக தேர்தல் தோல்வி: “பாஜக பாடம் கற்காது” – என். ராம்!

கர்நாடக தேர்தல் தோல்வி: “பாஜக பாடம் கற்காது” – என். ராம்!

by admin

கர்நாடகா தேர்தல் பாஜக நரேந்திர மோதி

பட மூலாதாரம்,GETTY IMAGES

கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்க தகுதி பெற்றுள்ளது. அந்த கட்சியின் வெற்றி, பா.ஜ.கவின் தோல்விக்கான காரணம், இந்த தேர்தல் முடிவு ஏற்படுத்தப்போகும் தாக்கம் ஆகியவை குறித்து பிபிசி தமிழ் மூத்த செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதனுக்கு காணொளி காட்சி மூலம் பேட்டியளித்தார் தி இந்து குழுமத்தின் இயக்குநர்களில் ஒருவரும் மூத்த பத்திரிகையாளருமான என். ராம். அவரது பேட்டியில் இருந்து.

கே. கர்நாடக தேர்தல் முடிவுகளில் காங்கிரஸ் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்று வருகிறது. இது குறித்த உங்கள் கருத்து என்ன?

ப. காங்கிரசை பொறுத்தவரை இது மிகப் பெரிய வெற்றி. காங்கிரஸ் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மோசமான நிலையில் இருப்பதாகச் சொல்லப்படும் நேரத்தில், இந்த வெற்றி அவர்களுக்கு ஊக்கமளிக்கும். இது தானாக நடக்கவில்லை. இதற்காக கடுமையாக வேலை செய்தார்கள். கர்நாடகத்தில் இருந்த பா.ஜ.க. அரசு செயல்படாத அரசு என்ற பெயர் வாங்கியிருந்ததால், ஆட்சிக்கு எதிரான மனநிலை இருந்தது. அதே நேரம், காங்கிரஸ் கட்சியில் பல பிளவுகள் இருந்தன. காங்கிரஸ் வெற்றிபெற்றால் யார் முதல்வர், யாருக்கு என்ன பதவி என்ற போட்டிகளோடு, ஜாதி ரீதியான பிளவுகளும் இருந்தன. அப்படியிருந்தும் ஒரு ஒற்றுமையை ஏற்படுத்தி வெற்றிபெற்றிருக்கிறார்கள். இது காங்கிரஸ் தலைமைக்குக் கிடைத்த வெற்றி.

கர்நாடக மாநில காங்கிரசில் சித்தராமையா, டி.கே. சிவகுமார் என இரண்டு பெரிய தலைவர்கள் இருக்கிறார்கள். சித்தராமையா மிக செல்வாக்கு மிக்கவர். சிவகுமாரைப் பொறுத்தவரை அவர் கடுமையாக பணியாற்றக்கூடியவர். இருவரும் ஒன்றிணைந்து செயல்பட்டார்கள். இந்த வெற்றியில் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு பெரிய பங்கு உண்டு. பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரும் கடுமையாக பிரச்சாரம் செய்தார்கள். பாரத் ஜோடா யாத்திரையின் தாக்கம் இந்தத் தேர்தலில் நிச்சயமாக இருக்கிறது. உள்ளே இருக்கக்கூடிய முரண்பாடுகளை சமாளித்து, இவ்வளவு தீவிர பிரசாரம் செய்து வெற்றி பெற்றது பெரிய சாதனைதான். ஆகவே, இது ஊக்கமளிக்கக்கூடிய, மகத்தான வெற்றி.

என். ராம் கர்நாடகா தேர்தல் பாஜக
படக்குறிப்பு,பா.ஜ.கவின் வாக்கு சதவீதம் மிகவும் குறையவில்லை என்றாலும் இரு கட்சிகளுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்திருக்கிறது என்கிறார் என். ராம்.

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பில் எல்லோருமே காங்கிரஸ் பக்கம்தான் வெற்றி இருக்கும் என சொன்னார்கள். குறிப்பாக இந்தியா டுடே – ஆக்ஸிஸ் கருத்துக் கணிப்பு கிட்டத்தட்ட சரியாக இருந்தது எனச் சொல்லலாம். காங்கிரசைப் பொறுத்தவரை சுமார் 43 சதவீத வாக்குகளைப் பெற்றிருக்கிறது. இது இந்திய தேர்தல் போக்குகளை வைத்துப் பார்த்தால், இது குறிப்பிடத்தக்க சதவீதம். பா.ஜ.க. சுமார் 36 சதவீத வாக்குகளையே பெற்றிருக்கிறது. பா.ஜ.கவின் வாக்கு சதவீதம் மிகவும் குறையவில்லை என்றாலும் இரு கட்சிகளுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்திருக்கிறது. 7 சதவீத முன்னணி என்பது காங்கிரசிற்கு பெரிய வெற்றி.

 

கே. காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்கும் நிலையில், முதல்வர் யார் என்பது குறித்து சித்தராமையாவுக்கும் டி.கே. சிவகுமாருக்கும் இடையில் முரண்பாடுகள் வர வாய்ப்புள்ளதா?

ப. இது காங்கிரசிற்கு சவால்தான். ஆனால், அதன் மேலிட தலைவர்கள் சமாளித்து விடுவார்கள். சித்தராமையா பிரபலமான, செல்வாக்குமிக்க தலைவர். நான் சிலரோடு சேர்ந்து சென்று இந்தத் தலைவர்களைச் சந்தித்தேன். அப்போது, டி.கே. சிவகுமாரை ஒரு நாள் விட்டு ஒரு நாள் சந்தித்துப் பேசுவதாகச் சொன்னார். அது உண்மைதான். இப்போதைய சூழலில் சித்தராமையாதான் முதல்வராவார். ஆனால், கடினமாக உழைத்த டி.கே. சிவகுமாருக்கும் ஏதாவது பதவி வழங்க வேண்டும். அவர் நிறைய தியாகங்களைச் செய்திருக்கிறார். சிறையில் அடைக்கப்பட்ட போது கூட, எந்த ஊசலாட்டமும் இல்லாமல் காங்கிரஸ் பக்கம் நின்றார். அவருக்கு பதவி கிடைக்கவில்லையென்றால் அவரது ஆதரவாளர்களுக்கு வருத்தம் நேரும். ஆனால், இன்னும் ஒற்றுமையாகச் செயல்படுவார்கள் என நினைக்கிறேன்.

 

கே. பாரதிய ஜனதா கட்சி தோற்கும்போதெல்லாம், ‘ஆபரேஷன் கமல்’, ‘ஆபரேஷன் லோட்டஸ்’ போன்ற நடவடிக்கைகளின் மூலம் ஆட்சியைப் பிடிப்பது குறித்துப் பேசுவார்கள். இப்போது அந்த வாய்ப்பு இருக்கிறதா?

ப. வாய்ப்பே இல்லை. 224 இடங்களில் காங்கிரஸ் 136 இடங்களைப் பெற்றிருக்கிறது. அதைத்தவிர மதசார்பற்ற ஜனதா தளமும் பல இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. பா.ஜ.க வெறும் 64 இடங்களை வைத்துள்ளது. எனவே அங்கு தாமரையால் மீண்டும் மலர முடியாது. இவ்வளவு குறைவான இடங்களைப் பெற்ற பிறகு, பழையபடி செய்ய மாட்டார்கள் என நினைக்கிறேன். அப்படிச் செய்தால், அதற்குப் பதிலடி இருக்கும். மக்கள் மத்தியில் அசிங்கமாகிவிடும். மீறிச் செய்தால் பாதிப்பை ஏற்படுத்தும். இருவருக்கும் இடையில் தொகுதிகள் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருந்தால் அத்தகைய முயற்சியில் ஈடுபடலாமே தவிர, குறைவான எண்ணிக்கை இருக்கும்போது அப்படி செய்ய முடியாது. அது மோசமான அரசியல் நடவடிக்கையாக இருக்கும்.

கர்நாடகா தேர்தல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கே. பா.ஜ.க. இந்துத்துவத்தை முன்வைத்து தேர்தலை சந்தித்தது. காங்கிரஸ் ஊழலை முன்வைத்து தேர்தலைச் சந்தித்தது. தற்போது காங்கிரஸ் வெற்றிபெற்றிருக்கும் நிலையில், பா.ஜ.கவின் இந்துத்துவத்தை கர்நாடக மக்கள் நிராகரித்துவிட்டதாகச் சொல்ல முடியுமா?

ப. நிச்சயமாகச் சொல்ல முடியும். பிரதமர் மோடிகூட அங்கு செல்லும்போது அனுமானைப் பற்றி கோஷம் எழுப்பினார். இது தேர்தல் விதிகளுக்கே எதிரானது. உள்ளூர் பிரச்சனைகள்தான் முக்கியமானவை என எல்லோரும் சொன்னாலும் அவர்களால் அவர்கள் சித்தாந்தத்திலிருந்து தப்ப முடியவில்லை. ஆகவே இந்தத் தோல்வி இந்துத்துவ சித்தாந்தத்தின் தோல்விதான்.

அதேபோல, தென்னிந்தியா முழுவதுமே பா.ஜ.க. ஆட்சியில் இல்லாமல் ஆகியிருக்கிறது. பல தசாப்தங்களாக கர்நாடகம் வேறு மாதிரி இருக்கும். இப்போது 64 இடங்களாக சுருங்கியிருப்பது மிக மோசமான தோல்விதான். இந்துத்துவத்திற்கு எதிராக கடுமையான சுவர் தென்னிந்தியாவில் எழுப்பப்பட்டது. காங்கிரஸ் இதற்காக கடுமையாகப் பணியாற்றியது. காங்கிரஸ் தலைவர்கள் சிறப்பாக பிரசாரம் செய்தார்கள். பெங்களூருவில் மட்டுமே பிரதமர் மோதியின் பிரசாரத்திற்கு பலன் கிடைத்திருக்கிறது. பா.ஜ.கவின் அரசியலை இப்போதைக்கு மக்கள் நிராகரித்திருக்கிறார்கள். ஆனால், இதை வைத்து மக்களவைத் தேர்தல் முடிவுகள் எப்படியிருக்குமெனச் சொல்ல முடியாது.

கே. இந்தத் தேர்தலில் பி.எல். சந்தோஷ் எல்லா முடிவுகளையும் எடுத்தார்; பசவராஜ் பொம்மை தலைமையில் அரசு இருந்தது; பிரதமர் மோதி கடுமையாக பிரசாரத்தில் ஈடுபட்டார் – இப்போது யார் இந்தத் தோல்விக்கு பொறுப்பேற்பது?

ப. முழு கட்சியும்தான் பொறுப்பேற்க வேண்டும். எல்லோரும் சேர்ந்து தான் செயல்படுகிறார்கள். ஆனால், அங்கிருந்த அரசின் போக்குதான் முக்கியமான காரணம். அந்த அரசை மக்களுக்குப் பிடிக்கவில்லை. மத்திய தலைமைக்கும் இந்தத் தோல்வியில் ஒரு பங்கு உண்டு. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், பா.ஜ.கவை மக்களுக்குப் பிடிக்கவில்லை. தொங்கு சட்டமன்றம் வரும் என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால், அப்படி நடக்கவில்லை.

கர்நாடகா தேர்தல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கே. இந்த தேர்தல் முடிவுகள் வரவிருக்கும் தேர்தல்களில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?

ப. வரவிருக்கும் தேர்தல்களுக்கு இது ஒரு குறியீடாகச் சொல்லலாம். ஆனால், மக்களவை தேர்தலைப் பொறுத்தவரை அது அகில இந்திய அளவில் நடக்கும் என்பதால், இதே போன்ற முடிவுகளை எதிர்பார்க்க முடியாது. பல மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளும் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளும் வெவ்வேறுவிதமாக இருக்கும். இந்தத் தேர்தல் தோல்வியை வைத்து, தென்னிந்தியாவில் பா.ஜ.கவுக்கு எதிரான அலை இருப்பதாகச் சொல்லலாம்.

காங்கிரசைப் பொறுத்தவரை, கூட்டணிகளைச் சரியாகக் கையாள வேண்டும். கூட்டணியைச் சரியாக எடுத்துச் செல்லும்போக்கு, காங்கிரசில் குறைந்துவிட்டது. சோனியா காந்தி காங்கிரஸ் தலைவராக இருக்கும்போது அதைச் சிறப்பாகச் செய்தார். மதச்சார்பற்ற அரசியலை ஜனநாயகபூர்வமாக எடுத்துச் சென்றார். இப்போது அப்படியிருக்குமா என்பதைப் பார்க்க வேண்டும்.

கூட்டணியைப் பொறுத்தவரை, ராகுல் காந்திக்கு வேறு பார்வை இருப்பதாக இருக்கிறது. உதாரணமாக உத்தர பிரதேசத்தில் பா.ஜ.கவுக்கு எதிரான பெரிய கட்சியாக சமாஜ்வாதி கட்சிதான் இருக்கிறது. ஆனால், அவர்களுக்கு எதிராக காங்கிரஸ் பிரசாரம் செய்கிறது. ஆட்களை நிறுத்துகிறது. இந்தப் போக்கை மாற்றிக்கொண்டால், காங்கிரஸ் முக்கியமான சக்தியாக மீண்டும் உருவெடுக்கும்.

கர்நாடக மாநிலத்தில் மூன்றாவது இடத்தைப் பிடித்த மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் நட்புணர்வைப் பேண வேண்டும்.

 

கே. அடுத்தாக ராஜஸ்தான், மத்தியப் பிரதேச சட்டமன்றத் தேர்தல்கள் இருக்கின்றன. கர்நாடகத் தேர்தல் வெற்றி, தேர்தல்களை எதிர்கொள்வது பற்றிய ஒரு பாடத்தை காங்கிரசிற்குத் தந்திருப்பதாகச் சொல்லலாமா?

ப. நிச்சயம் சொல்லலாம். மத்தியப் பிரதேசத்தில் காங்கிரசிற்கு வாய்ப்பிருக்கிறது. ராஜஸ்தானில் ஆட்சிக்கு எதிரான மன நிலை எப்படியிருக்கிறது என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனாலும் கட்சி அங்கே பலமாகத்தான் இருக்கிறது. அசோக் கெலாட்டுடன் சச்சின் பைலட்டிற்கு முரண்பாடுகள் இருந்தாலும் அவர் கட்சியைவிட்டு வெளியேறவில்லை. ஆனால், பா.ஜ.க. அங்கு ஒரு பலம்வாய்ந்த சக்தி என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

கே. இந்தத் தேர்தல் முடிவுகள் பா.ஜ.கவுக்கு என்ன படிப்பினையைத் தந்திருக்கின்றன?

ப. அவர்கள் எந்தப் படிப்பினையையும் எடுத்துக்கொள்ள மாட்டார்கள். நாங்கள் எதிர்காலத்தை மனதில் கொண்டு செயல்படுவதாகச் சொல்வார்கள். செயல்படும் விதத்தை மட்டும் மாற்றிக்கொள்வார்கள். இந்துத்துவம், இந்து ராஷ்ட்டிரம் போன்ற சித்தாந்தங்களை விடமாட்டார்கள். ஜனநாயக அமைப்புகளை எப்படி செயல்படாமல் செய்ய முடியும் என்பதைப் பார்ப்பார்கள்.

உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தேர்தல் ஆணையம், சபாநாயகர், ஆளுநர் குறித்தெல்லாம் சமீபத்தில் பல முக்கியத் தீர்ப்புகளைத் தந்திருக்கிறது. மக்களும் நீதிமன்றமும் இவர்களது தவறான போக்கை தடுக்க வேண்டும். ஆனால், அது நடக்கவில்லை. இப்போது நீதிமன்றத்தில் இது நடக்க ஆரம்பித்திருக்கிறது. ஒரு மதசார்பற்ற, ஜனநாயக குடியரசில் அரசியலமைப்பின் பங்கை பல தீர்ப்புகள் சுட்டிக்காட்டியிருக்கின்றன. அவை வரவேற்கத்தக்கவை.

பா.ஜ.க தலைவர்களைப் பொறுத்தவரை, ‘உச்ச நீதிமன்ற தடை’ இருந்தால் சற்று பின்வாங்குவார்கள். அந்தத் தடை நீங்கிய பிறகு மறுபடியும் தங்கள் பாதையில் செல்வார்கள். ஆகவே எந்தப் படிப்பினையுையம் அவர்கள் பெற மாட்டார்கள்.

அடுத்த 15-20 ஆண்டுகளை மனதில் வைத்துத்தான் செல்படுகிறோம் என அமித் ஷா சொல்லியிருக்கிறார். ஆகவே, இந்தத் தோல்வியை எல்லாம் அவர்கள் கணக்கில் கொள்ள மாட்டார்கள்.

  • எழுதியவர்,முரளிதரன் காசி விஸ்வநாதன்
  • பதவி,பிபிசி தமிழ்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More