Home இலங்கை பதினான்காவது மே பதினெட்டு – நிலாந்தன்!

பதினான்காவது மே பதினெட்டு – நிலாந்தன்!

by admin

எதற்காக தமிழ் மக்கள் உயிர்களை, உறுப்புகளை, சொத்துக்களை கல்வியை இன்னபிறவற்றைத் தியாகம் செய்தார்களோ, எதற்காக லட்சக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டார்களோ, காணாமல் ஆக்கப்பட்டார்களோ,அதற்குரிய நீதி தமிழ்மக்களுக்கு கிடைக்க வேண்டும்.எந்தப் போராட்டத்தின் பெயரால் தமிழ் மக்கள் அழிக்கப்பட்டார்களோ, அந்தப் போராட்டத்தின் பலன் தமிழ் மக்களுக்கு கிடைக்க வேண்டும். எனவே நினைவுகூர்தல் எனப்படுவது தமிழ்மக்கள் போராடியதன் பலனை பெறுவதற்கான ஓர் அரசியல் செயற்பாடுதான். நீதிக்கான தமிழ்மக்களின் போராட்டத்தில் அதுவும் ஒரு பகுதிதான்.

நவீன தமிழ் வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட இடத்தில்,ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்குள், அதிக தொகை மக்கள் கொல்லப்பட்ட ஒரு காலகட்டத்தை நினைவு கூர்வதே முள்ளிவாய்க்கால் நினைவுகூர்தல் ஆகும். எனவே முழுத் தமிழ் வரலாற்றிலும் நவீன காலத்தில் நிகழ்ந்த மிகப்பெரிய படுகொலை என்ற அடிப்படையில் அந்த உணர்ச்சிப் புள்ளியில் முதலாவதாக, ஈழத்தமிழர்களை ஒரு தேசமாக திரட்டலாம்.இரண்டாவதாக,உலகெங்கிலும் பரந்துவாழும் தமிழர்களை இன அடிப்படையில் திரட்டலாம். அவ்வாறு திரட்டி அந்த கூட்டுத் துக்கத்தை, கூட்டுக் கோபத்தை, கூட்டு அரசியல் ஆக்க சக்தியாக மாற்றினால் தமிழ் மக்களுக்கு நீதியைப் பெறுவதற்கான உந்துவிசையாக அது அமையும். எனவே நினைவுகூர்தல் எனப்படுவது நீதிக்கான போராட்டத்தின் பிரிக்கப்படவியலாத ஒரு பகுதி.

அதை அவ்வாறு வடிவமைக்க வேண்டும்.இப்பொழுது நடைமுறையில் உள்ள பொதுக் ஏற்பாட்டுக் குழுவானது ஒரு குறிப்பிட்ட இடத்தை ஒரு குறிப்பிட்ட நாளில் நிர்வகிக்கும் ஒரு கட்டமைப்பே தவிர அது மேற்சொன்ன அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு பொதுக் கட்டமைப்பு அல்ல.

கடந்த 14 ஆண்டுகளாக பொருத்தமான ஒரு பொறிமுறையை,பொருத்தமான ஒரு பொதுக் கட்டமைப்பை தமிழ் மக்கள் உருவாக்கவில்லை.காலம் ஆற்றாத துக்கம் என்று எதுவுமில்லை.கூட்டுத் துக்கத்தை உரிய பொறிமுறைக்கூடாக கூட்டு ஆக்கசக்தியாக மாற்றவில்லை என்றால் அது வெறும் துக்கமாகச் சுருங்கிவிடும்.எனவே ஒரு கூட்டுத் துக்கத்தை கூட்டு ஆக்கசக்தியாக மாற்றி,அதை நீதிக்கான போராட்டத்தின் ஊக்க சக்தியாக மாற்ற வேண்டும்.அதற்கு வேண்டிய பொறி முறையும் கட்டமைப்பும் உருவாக்கப்பட வேண்டும். இது முதலாவது.

இரண்டாவது, முள்ளிவாய்க்காலை நினைவு கூர்வது என்பது ஒரு யுத்த களத்தின் இறுதிக் கட்டத்தை நினைவு கூர்வதுதான். அந்த யுத்தகளத்தில் தமிழ் மக்களுக்கு தாமாக முன்வந்து தம் உயிர்களைக் கொடுத்தவர்கள்,உறுப்புகளை இழந்தவர்கள்,கல்வியை இன்னபிறவற்றை இழந்தவர்கள்,என்று ஆயிரக்கணக்கானவர்கள் உண்டு.போரில் நேரடியாக சம்பந்தப்படாமலேயே கொல்லப்பட்டவர்களும் காணாமல் ஆக்கப்பட்டவர்களும் உண்டு. அவர்களனைவர்க்கும் உதவி தேவை.நிவாரணம் தேவை.ஆறுதல் தேவை.ஆனால் கடந்த 14 ஆண்டுகளில் எத்தனை பேருக்கு அவ்வாறான உதவிகள் கிடைத்திருக்கின்றன?

புலம்பெயர்ந்த தமிழ்ச்சமூகம் குறிப்பிடத்தக்க அளவிற்கு உதவிகளை செய்கின்றது.ஆனால் அது ஒரு மையத்திலிருந்து திட்டமிடப்பட்ட,ஒரு மையத்தில் இருந்து வழங்கப்படுகின்ற உதவி அல்ல.கடந்த 14 ஆண்டுகளில் போரால் பாதிக்கப்பட்ட பலர் கைவிடப்பட்டிருக்கிறார்கள்.போரில் ஈடுபட்ட பலர் கைவிடப்பட்டிருக்கிறார்கள்,அல்லது அவமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.இறுதிக்கட்டப் போரில் தமது குடும்பத்தின் உழைக்கும் நபரை அல்லது நம்பிக்கை நட்சத்திரமாக இருந்தவரை அல்லது வருமான வழியை இழந்த பல குடும்பங்கள் உண்டு.அக்குடும்பங்கள் யாவும் கடந்த 14 ஆண்டுகளில் தேறி எழுந்து விட்டனவா இல்லையா என்று பார்க்க வேண்டும்.போரால் பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்தின் வீட்டில் அல்லது ஒரு தியாகியின் வீட்டில் அல்லது காணாமல் ஆக்கப்பட்டவரின் வீட்டில் அடுப்பு எரியவில்லை என்றால்,முள்ளிவாய்க்காலில் ஏற்றப்படும் சுடர்களின் மகிமை குறைந்து விடும். எனவே போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்கு ஒரு பொருத்தமான பொறிமுறையும் அதற்கு வேண்டிய கட்டமைப்பும் தேவை.

புலம்பெயர்ந்த தமிழ்மக்களிடம் போதியளவு பணம் உண்டு.உதவுவதற்கு விருப்பமும் உண்டு.ஆனால் பொருத்தமான ஒரு பொறிமுறையை, பொருத்தமான ஒரு கட்டமைப்பை யார் உருவாக்குவது?கடந்த 14 ஆண்டுகளாக அவ்வாறான கட்டமைப்புகளை ஏன் உருவாக்க முடியவில்லை?

குறிப்பாக,முன்னாள் இயக்கத்தவர்களின் கதி என்னவென்று பார்க்க வேண்டும். நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் வசதியான குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று விட்டார்கள். அல்லது நாட்டில் ஏதோ ஒரு விதத்தில் “செற்றில்ட்” ஆகிவிட்டார்கள்.ஆனால் இப்பொழுதும் செற்றில்ட் ஆகாத பல குடும்பங்கள் உண்டு.2009க்குப் பின் முன்னாள் இயக்கத்தவர்கள் மத்தியில் குடும்பங்கள் பிரிந்திருக்கின்றன.பிள்ளைகள் கைவிடப்பட்டுள்ளன.பெற்றோர் அனாதைகள் ஆகியிருக்கிறார்கள்.போரில் பட்ட காயத்தின் விளைவாக ஏற்பட்ட நோய்க்கு மருத்துவம் செய்யக் காசு இல்லாமல் தத்தளிக்கும் பலர் உண்டு.என்ன நோய் என்று தெரியாமலேயே இறந்து போன பலர் உண்டு. இவர்களுக்கெல்லாம் உதவ ஏதாவது கட்டமைப்பு இருக்கிறதா?இல்லையென்றால் யார் பொறுப்பு?

இலங்கைத் தீவிலேயே போரால் பாதிக்கப்பட்ட தரப்புக்களில் இப்பொழுதும் அதிகம் ஆபத்துக்கு உள்ளாகக்கூடிய ஒரு வகுப்பினராக(most vulnerable) காணப்படுவது முன்னாள் இயக்கத்தவர்கள்தான்.நாட்டின் சட்ட அமைப்பின்படி புனர்வாழ்வு ஒரு தண்டனை அல்ல என்பதனை கடந்த 14 ஆண்டு காலம் நிரூபித்திருக்கிறது.இந்நிலையில் மீண்டும் மீண்டும் ஒரே குற்றத்துக்காகத் தண்டிக்கப்படக்கூடிய ஒரு தரப்பாக முன்னாள் இயக்கத்தவர்கள் காணப்படுகிறார்கள்.அது தொடர்பாக நமது சட்டத்தரணிகள் என்ன செய்திருக்கிறார்கள்?தனிப்பட்ட வழக்குகளில் தோன்றி குறிப்பிட்ட முன்னாள் இயக்கத்தவரை விடுதலை செய்திருக்கிறார்கள் என்பது உண்மை.ஆனால் அதை ஒர் அரசியல் விவகாரமாக மாற்றி அதற்கு வேண்டிய சட்ட ஏற்பாடுகளைக் கொண்டு வர ஏன் ஒருவரும் முயற்சிக்கவில்லை?

அது மட்டுமல்ல,முன்னாள் இயக்கத்தவர்கள் புனர்வாழ்வின் பின் ஜனநாயக அரசியல் இறங்கினார்கள்.அவ்வாறு இறங்கியவர்கள் கூட்டமைப்ப,தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிதமிழ் மக்கள் தேசியக்கூட்டணி போன்றவற்றில் இணைந்து தேர்தல் கேட்டார்கள். துயரம் என்னவென்றால் ஒருவருமே தேர்தலில் பெறுமதியான வெற்றிகளைப் பெறவில்லை.துயிலுமில்லங்களில் தமிழ்மக்கள் விட்ட கண்ணீர் யாவும் எங்கே போய் சேருகின்றது? அதை யார் வாக்குகளாக மாற்றுகிறார்கள்?

“உன்னுடைய சமூகத்திற்காக நீ கல்வியைத் துறந்தாய், உறுப்புகளை இழந்தாய், உயிரைக் கொடுக்கச் சித்தமாக இருந்தாய், ஆனால் உனக்காக இந்தச் சனம் குறைந்தது உள்ளூராட்சி சபையில் ஒரு வட்டாரத்துக்கு தேவையான ஆயிரம் வாக்குகளைக் கூடத் தரவில்லையே? அப்படியென்றால் உன்னுடைய இறந்த காலத்துக்குப் பொருள் என்ன?” என்று ஒரு முன்னாள் இயக்கத்தவரின் பிள்ளை கேட்டால், அதற்கு அந்த தகப்பன் அல்லது தாய் என்ன பதில் சொல்ல முடியும்? அதே கேள்விக்கு தமிழ் மக்கள் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?

முன்னாள் இயக்கத்தவர்கள் தடுப்பிலிருந்து விடுவிக்கப்பட்ட பின் அவர்களை தடுப்பில் வைத்திருந்த தரப்பு அவர்களோடு உறவுகளைப் பேணும்.அது ஒரு யதார்த்தம்.அவ்வாறு பேணுவதன்மூலம் அரசாங்கம் இரண்டு விடயங்களைச் சாதிக்கலாம்,ஒன்று,அவர்களைக் கண்காணிக்கலாம்,இரண்டு,அவர்களோடு தொடர்ந்து தொடர்புகளைப் பேணினால்,அவர்களுடைய சொந்த மக்களே முன்னாள் இயக்கத்தவர்களை சந்தேகிப்பார்கள்.எதிரியின் ஆட்கள் என்று முத்திரை குத்துவார்கள்.எந்த சமூகத்துக்காக அவர்கள் போராடினார்களோ,அந்தச் சமூகமே அவர்களைப் புறமொதுக்கி,அவமதித்து விலகிச் செல்லும் ஒரு நிலையை ஏற்படுத்தலாம்.

கடந்த 14 ஆண்டுகளில் தமிழ்க் கட்சிகளே அவ்வாறு முன்னாள் இயக்கத்தவர்களைக் குற்றம்சாட்டி வருகின்றன.முன்னாள் இயக்கத்தவர்களில் ஒரு பகுதியினர் அவ்வாறு அரசு புலனாய்வுத் துறையோடு சேர்ந்து செயல்படக்கூடும்.ஆனால் அதற்காக எல்லாரும் அப்படியல்ல.கடந்த 14 ஆண்டுகளில் தேர்தலில் இறங்கிய முன்னாள் இயக்கத்தவர்களில் யாருமே பொருத்தமான வெற்றிகளை பெறாததற்கு என்ன காரணம் ?இந்த விடயத்தில் முன்னாள் இயக்கத்தவர்களின் கட்சியை அரச புலனாய்வுத் துறையின் ஆட்கள் என்று விமர்சிக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் நின்று தேர்தல் கேட்டவர்களும் இதுவரை வெற்றி பெறவில்லை என்பதனை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.

எனவே இறந்தவர்களை நினைவு கூர்வது என்பது அவர்கள் கொல்லப்பட்ட யுத்த களத்தை நினைவு கூர்வதுதான்.அந்த யுத்த களத்தில் தமது சமூகத்துக்காகப் போராடியவர்களை அவர்களுடைய நோக்கு நிலையில் இருந்து புரிந்து கொள்ள முயற்சிப்பதும்தான். இது இரண்டாவது.

மூன்றாவது,இறந்தவர்களை நினைவுகூர்வது என்பது,அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு நினைவுகளைக் கடத்துவது.நீதிக்கான தமிழ்மக்களின் போராட்டம் மேலும் நீண்ட காலத்துக்கு இழுபடலாம் அதுமட்டுமல்ல கடந்த 14 ஆண்டுகளில் தொழில்நுட்பப் பெருக்கம் காரணமாகவும்,தலைமைத்துவ வெற்றிடம் காரணமாகவும்,புதிதாக எழுந்து வரும் ஒரு தலைமுறை பெருமளவுக்கு அரசியல் நீக்கம் செய்யப்பட்டதாகவோ,அல்லது இலட்சிய நீக்கம் செய்யப்பட்டதாகவோ மாறிவருகின்றது.அந்தத் தலைமுறைக்கும், உலகெங்கிலும் புலம்பெயர்ந்து சிதறி வாழும் ஈழத்தமிழர்களின் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் நினைவுகளைக் கடத்த வேண்டியிருக்கிறது. நினைவுகளின் தொடர்ச்சிக்குள் ஒரு தேசத்தைக் கட்டியெழுப்ப வேண்டியிருக்கிறது. அதற்கு நினைவு கூர்தல் அவசியம். இது மூன்றாவது.

நாலாவதாக,நினைவு கூர்தல் எனப்படுவது,ஒரு கூட்டுச் சிகிச்சை போன்றது. துக்கத்தை கொட்டித் தீர்க்கும் நாளும், இடமும் அது.வெளிவழிய விடப்படாத துக்கம் உள்ளுக்குள் கிடந்து குமைந்து அடங்காத கோபமாக மாறிவிடும். அல்லது நோயாக மாறிவிடும்.எனவே உளவியல் அர்த்தத்திலும் பண்பாட்டு அர்த்தத்திலும் துக்கத்தை வெளிவழிய விடவேண்டும்.அந்த அடிப்படையில் நினைவு கூர்தல் என்பது ஒரு குணமாக்கல் செய்முறை.ஒரு பண்பாட்டுச் செய்முறை.

மேற்கண்ட நான்கு முக்கிய காரணங்களையும் முன்வைத்து நினைவு கூர்தலை ஒழுங்குபடுத்த வேண்டும்.ஆனால் கடந்த 14 ஆண்டுகளாக நினைவு கூர்தல் அவ்வாறு ஒழுங்குபடுத்தப்படுகின்றதா?அவ்வாறு ஒழுங்குபடுத்தப்படவில்லை என்றால் அதற்கு யார் பொறுப்பு?

இந்தக் கேள்வியை மறுவளமாகக் கேட்டால் தமிழ் மக்களுக்கு யார் பொறுப்பு? என்றுதான் கேட்க வேண்டும்.ஏனென்றால் கடந்த 14 ஆண்டுகளாக தமிழ் மக்களின் அரசியல் எனப்படுவது கட்சி அரசியலாகத்தான் காணப்படுகின்றது. கொழும்பு அல்லது வெளித்தரப்புகள் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு பதில்வினை ஆற்றும் அரசியலாக தறுக்கணித்துப் போய்விட்டது.அது தேசத்தை கட்டியெழுப்பும் ஓர் அரசியல் அல்ல.

சிங்கள பௌத்த மயமாக்கலுக்கு எதிராகவும், காணிப் பறிப்புக்கு எதிராகவும், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதிகேட்டும் தமிழ்மக்கள் போராடுகிறார்கள்தான்.ஆனால் அவற்றில் பெரும்பாலானவை,எனது கடந்த வாரக் கட்டுரையில் கூறியது போல,பதில் வினையாற்றும்(reactive)நிகழ்வு மைய அரசியல்தான்(event oriented). அவை ஒரு தேசநிர்மாணத்துக்குரிய கட்டியெழுப்பும் (proactive) அரசியல் அல்ல.

ஒரு தேசத்தைக் கட்டியெழுப்பும் அரசியலில்தான் நினைவு கூர்தல், அதற்குரிய மகிமையோடும் அரசியல் அடர்த்தியோடும் அனுஷ்டிக்கப்படும்.அதற்குரிய பல்வகைமையோடு அனுஷ்டிக்கப்படும்.இல்லையென்றால் கட்சிகளாக பிரிந்திருக்கும் மக்கள் நினைவுகூர்தலை அதற்குரிய பெறுமதியுணர்ந்து அனுஷ்டிக்கப் போவதில்லை.மாறாக,அது ஒரு துக்க நிகழ்வாக,அல்லது செயலுக்குப் போகாத பிரகடனங்களை வாசிக்கும் ஒரு நிகழ்வாக,ஒரு சடங்காகச் சுருங்கிப் போய்விடும்.

இம்முறை,பல்கலைக்கழக மாணவர்கள் சமூகப்பங்களிப்போடு கஞ்சி காய்ச்சுவது ஒரு நல்ல முன்னுதாரணம்.அதேசமயம் கட்சிகளுக்கு எதிராக கருத்துக்களைக் கூறாமல் விட்டால் அதுவும் ஒரு நல்ல முன்னுதாரணம்.முள்ளிவாய்க்காலில் தாமாகத் திரளக்கூடிய மக்களை,கட்சிகளும் பொதுக்கட்டமைப்புகளும் மாணவர்களும் பிரிக்காமல் விட்டாலே போதும். இறந்தவர்களின் ஆத்மா இந்த ஒரு விடயத்திலாவது சாந்தி அடையும். ஏனெனில் மனநல மருத்துவ நிபுணர் சிவதாஸ் கூறுவதுபோல “நினைவுகூர்தல் எனப்படுவது காயங்களைக் குணப்படுத்துவது,காயங்களைக் கிளறுவது அல்ல”.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More