தெற்கு பசுபிக் பிராந்தியத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 7.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால், நியூ கலிடோனியா, பிஜி, சவனுவாட்டு போன்ற பகுதிகளில் சுனாமி பாதிப்புகள் ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நியூ கலிடோனியா அருகே 38 கிமீ (24 மைல்) ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் வனுவாட்டுவில் ஒரு மீட்டர் அளவிற்கு அலைகள் உயரும் சாத்தியம் என்றும், பிஜி, நியூ கலிடோனியா மற்றும் கிரிபாட்டிக் பகுதிகளில் 0.3 மீட்டர் வரை அலைகள் எழும் சாத்தியம் என்றும் அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு கூறியுள்ளது. மேலும் பப்புவா நியூ கினியா, குவாம் மற்றும் பிற பசிபிக் தீவுகளில் சிறிய அளவில் கடல் அலைகள் எழும் சாத்தியம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்தின் கடலோரப் பகுதிகளில் வலுவான மற்றும் அசாதாரண நீரோட்டங்கள் மற்றும் கரையில் கணிக்க முடியாத அலைகள் ஏற்படும் என நியூசிலாந்தின் சிவில் பாதுகாப்பு நிறுவனம் ஒரு ஆலோசனையை வெளியிட்டுள்ளது.
அவுஸ்ரேலியாவின் லார்ட் ஹோவ் தீவு “கடல் சூழலில் ஆபத்தான கிழிசல்கள், அலைகள் மற்றும் வலுவான கடல் நீரோட்டங்களால் பாதிக்கப்படலாம்” என்று நியூ சவுத் வேல்ஸ் மாநில அவசர சேவை (SES) தெரிவித்துள்ளது.