வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தினுடைய விக்கிர உடைப்புக்கும் இந்து பௌத்த சங்கத்திற்கும் நேரடி சம்மந்தம் இருப்பதாக நாம் குற்றம் சாட்டுவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் வவுனியா மாவட்ட செயற்பாட்டாளர் எஸ். தவபாலன் தெரிவித்துள்ளார்.
வவுனியா ஊடக அமையத்தில் நேற்று (03.07.23) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், வவுனியாவில் அண்மைக்காலமாக ஒரு அமைப்பு செயற்பட்டு வருகின்றது. அந்த அமைப்பு தொடர்பாக முகப்புத்தகத்தில் பதிவேற்றம் செய்தமைக்காக இன்றைய தினம் வவுனியா காவல் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக கூறியுள்ளார்.
இந்து பௌத்த சங்கம் என்ற பெயரில் அண்மைகாலமாக ஆலயங்களின் திருவிழாக்களில் நிர்வாகத்தினரின் அனுமதியின்றி ஆலயங்களில் பதாதை ஒன்று கட்டப்பட்டு வருகின்றது. இந்து பௌத்த சங்கம் என்று இயங்கும் அமைப்பு ஐக்கிய தேசியக் கட்சியை பின்புலமாக கொண்ட அமைப்பு. குருமன்காடு பிள்ளையார் ஆலயத்தின் முன்னால் இருந்த தாகசாந்தி நிலையத்தில் கூட இந்த அமைப்பு தனது பதாதையை போட்டிருந்தது.
இதை தான் அவதானித்து எனது முகப்புத்தகத்தில் ஒரு அரசியல் செயற்பாட்டாளராக பொது மக்களுக்கான பொது பிரச்சனை என்ற அடிப்படையில் தனக்கு இருக்கும் கருத்து சுதந்திரத்திற்கு அமைய முகப்புத்தகத்தில் இந்த இந்து பௌத்த சங்கம் என்கின்ற அமைப்பு தேவையற்ற வகையில் தமிழர்களுடைய சைவ ஆலயங்களில் இந்த பதாதைகளை தொங்க விடுவது பௌத்தமயமாக்கலை ஏற்படுத்துவதற்காகவும், தேவையற்ற வகையில் மதங்களுக்கு இடையில் பிரச்சனையை ஏற்படுத்தவும் என்ற அடிப்படையில் பதிவேற்றப்பட்டது.
அதற்காக இந்த அமைப்பு சார்ந்து இயங்கும் சில நபர்கள் வவுனியா காவற்துறையில் முறைப்பாடு செய்து விசாரிக்கப்பட்டது. அதற்கான வாக்குமூலம் பெறப்பட்டது. உண்மையில் இந்த அமைப்பு அண்மைக்காலமாக கணிசமான ஆலயங்களில் இந்த பதாதைகளை தொங்க விடுகிறது.
முற்று முழுதாக தமிழர் தாயகத்தில் ஒரு பௌத்த மயமாக்கலை மேற்கொள்வதற்காக திட்டமிட்டு இயங்கும் அமைப்பாக குற்றம் சாட்டுவதாக கூறுகிறார். வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தினுடைய விக்கிர உடைப்புக்கும் இந்த அமைப்புக்கும் நேரடி சம்மந்தம் இருப்பதாக தாம் குற்றம் சாட்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.