இலங்கையில் வாழும் அனைவருக்கும் இலங்கை சொந்தம். தாம் விரும்பும் மதத்தை பின்பற்றும் உரிமை அனைவருக்கும் உண்டு என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
யாழில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில், நாடாளுமன்றில் சரத் வீரசேகர , குருந்தூர் மலை விவாகரம் தொடர்பில், நீதவானை விமர்சித்தமை தொடர்பில் கேட்ட போது கருத்து வெளியிட்ட அவர், இந்த அரசாங்கத்தில் பல்வேறுபட்ட சிந்தனைகள் கொள்கையுடையவர்கள் இருக்கின்றனர். ஆனால் ஜனாதிபதி நல்லிணக்கத்தை ஏற்படுத்தவே முயற்சிக்கின்றார். இந்த நாடு இந்த நாட்டில் வாழும் அனைவருக்கும் சொந்தம். அனைவரும் தாம் விரும்பும் மதத்தை பின்பற்றும் உரிமை உண்டு.. எவர் என்ன சொன்னாலும் ஜனாதிபதி நாட்டில் ஒற்றுமை சமாதானத்தை ஏற்படுத்தவே முயற்சிக்கின்றார்.
13ஆம் திருத்த சட்டத்தின் ஊடாக அதிகாரத்தை பகிர்வது தொடர்பில் ஐனாதிபதி ஆராய்ந்து வருகின்றார். அதற்காக தமிழ் அரசியல்வாதிகளுடன் பேசியுள்ளார். விரைவில் 13ஆம் திருத்த சட்டம் , திருத்தங்களுடன் நடைமுறைப்படுத்தப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.