டெல்லிக்கு போவதற்கு இரண்டு நாட்களுக்கு முன் கடந்த 18ஆம் தேதி செவ்வாய்க்கிழமை,ரணில் விக்கிரமசிங்க தமிழ்க் கட்சிகளுக்கு எதைத் தரமுடியும் என்று கூறினாரோ,அதைத்தான் இந்தியப் பிரதமரின் முன்னிலையில் வைத்தும் திரும்பக் கூறிவிட்டு வந்திருக்கிறார்.தமிழ்க் கட்சிகளுக்கு அவர் சொன்னது போலீஸ் அதிகாரம் இல்லாத ஒரு மாகாண சபை. போலீஸ் அதிகாரம் என்பது என்ன? ஒரு சட்டமன்றம் தான் உருவாக்கிய சட்டங்களை அமல்படுத்துவதற்கான ஓர் அதிகாரக் கட்டமைப்புத்தான்.அதை இன்னும் தெளிவாகச் சொன்னால்,ஒரு சட்டமன்றத்தின் அதிகாரத்தை அமுல்படுத்தும் பிரிவு போலீஸ்தான்.உலகம் முழுதும் அதுதான் நிலைமை. அந்த அதிகாரம் இல்லையென்றால், நிதி அதிகாரம், கல்வி அதிகாரம், காணி அதிகாரப் உட்பட வேறு எந்த அதிகாரம் இருந்தாலும் பலன் இல்லை.எனவே போலீஸ் இல்லாத மாகாண சபை என்பது 13 மைனஸ்தான்.
அதைத்தான் தன்னால் தர முடியும் என்று ரணில் தெளிவாகத் திட்டவட்டமாகத் தமிழ்க் கட்சிகளுக்குச் சொன்னார். 2005இல் நான் தர முற்பட்டதை நீங்கள் நிராகரிதீர்கள்.அதே தவறை இந்தமுறையும் செய்யாதீர்கள் என்று ஒரு விதத்தில் எச்சரிக்கையாகவும் அவர் அதைச் சொன்னார். கொழும்பில் வைத்து அவர் அதைத் தமிழ்க் கட்சிகளுக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கும் சேர்த்துத்தான் சொன்னார். இந்தியாவை நோக்கி 13ஐ முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்று கேட்ட கட்சிகளுக்கும் 13ஐத் தீர்வின் தொடக்கமாக ஏற்றுக்கொண்ட கட்சிகளுக்கும்,13 வேண்டாம்,கூட்டாட்சிதான் வேண்டும் என்று கேட்ட கட்சிகளுக்கும் சேர்த்து அவர் அதைச் சொன்னார்.
இந்தியாவில் வைத்தும் அதை அவர் மீளச்சொன்னார் “இந்த வாரம் நான் முன்வைத்த விரிவான முன்மொழிவு” என்று அவர் அதைக் கூறுகிறார். மட்டுமல்ல, “வடக்கு அபிவிருத்தித் திடடம்” என்ற வார்த்தையை அவர் பயன்படுத்துகிறார்.வடக்கு-கிழக்கு என்று தமிழர்களின் தாயகத்தை இணைத்துக் கூறவில்லை.
எனவே ரணில் மிகத் தெளிவாக இருக்கிறார்.அதைவிடக் கூடுதலாக அவர் துணிச்சலாகவும் இருக்கிறார்.கொழும்பில் சொன்னதையே டெல்லியில் வைத்தும் சொல்கிறார்.கோத்தாபய தனது முதலாவது இந்திய விஜயத்தின்போதும் இனப்பிரச்சினை தொடர்பில் இதே தொனியில்தான் பேசினார். அவர் மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு ஆட்சிக்கு வந்தவர். ஆனால் ரணில் என்ன துணிச்சலில் அவ்வாறு கூறுகிறார்?அவருடைய துணிச்சலுக்கு பின்வரும் காரணங்கள் உண்டு.
முதலாவது காரணம் எல்லாப் பேரரசுகளையும் சம தூரத்தில் வைத்திருக்கக் கூடிய ஒரு தலைவர் தான் மட்டுமே என்ற துணிச்சல். எந்தப் பேரரசையும் அதிகம் நெருங்கிச் செல்ல வேண்டிய தேவை, வாழ்க்கைப் பின்னணி தனக்கு இல்லை என்று அவர் நம்புகிறார்.ராஜபக்ஸக்களோடு ஒப்பிடுகையில் அது அவருடைய பலந்தான்.அதனால்தான் இந்தியா அவர் பதவிக்கு வருவதை முதலில் விரும்பவில்லை.டளஸ் அழகப்பெருமவை ஆதரிக்குமாறு தமிழ்க் கட்சிகளைக் கேட்டது.
இரண்டாவது துணிச்சல், தமிழ்க் கட்சிகளால் போராட முடியாது என்று அவர் நம்புகிறார். கூட்டாட்சி அல்லது முழுமையான 13 அல்லது கொன்ஃபெடரேஷன் போன்ற எந்த கோரிக்கைகளை முன்வைத்தாலும், எந்த ஒரு தமிழ்க் கட்சியும் அதற்காக போராடும் திராணியோடு இல்லை என்பதை அவர் சரியாகக் கணித்து வைத்திருக்கிறார். மாறாக சிங்கள பௌத்த மயமாக்கலுக்கு எதிராக ஆங்காங்கே தெட்டந் தெட்டமாகப் போராடத்தான் தமிழ்க் கட்சிகளால் முடியும் என்றும் அவர் சரியாகக் கணித்து வைத்திருக்கிறார்.பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலுமான போராட்டத்தைப்போல அல்லது எழுக தமிழ், பொங்கு தமிழ்களைப் போல,பெருமளவு மக்களைத் திரட்டிப் போராடும் நிலைமையில் தமிழ்க் கட்சிகள் இல்லை என்பதை அவர் சரியாகக் கணித்து வைத்திருக்கிறார்.மேலும் தமிழ்க் கட்சிகளின் சிறுதிரள் போராட்டங்களின் விளைவாக, தனக்குச் சிங்களபௌத்த வாக்குகள் அதிகம் சேரும் என்பதும் அவருடைய கணிப்பு.இப்பொழுது 13 மைனஸ் என்று கூறுவதன்மூலமும் அவருக்கு சிங்கள பௌத்த வாக்குகள் திரளும்.
மூன்றாவது துணிச்சல்,இந்தியாவுக்குள்ள வரையறைகளை அவர் விளங்கி வைத்திருக்கிறார்.13ஆவது திருத்தம் தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தின் விளைவுதான்.ஆனால் அது தமிழ் மக்களின் தெரிவு அல்ல. மிகச்சரியான வார்த்தைகளில் சொன்னால்,அது இந்திய இலங்கை அரசுத் தலைவர்களின் குழந்தை.எனவே அதற்கு இந்தியாவும் இலங்கையுந்தான் பொறுப்பு.அதை அமுல்படுத்துவதற்கு இரண்டு நாடுகளுந்தான் பொறுப்பு. ஆனால் ஒன்றேகால் இலட்சம் இந்தியப் படைகளை வைத்துக்கொண்டு அதைச் செய்ய இந்தியாவால் முடியவில்லை. கடந்த 36 ஆண்டுகளாக 13ஐ முழுமையாக அமல்படுத்துமாறு இலங்கைமீது நிர்ப்பந்தங்களைப் பிரயோகிக்க இந்தியாவால் முடியவில்லை. அல்லது இந்தியா விரும்பவில்லை.குறிப்பாக போர் காரணமாக அதைச் செய்ய முடியவில்லை என்று ஒரு சாட்டைச் சொன்னால். 2009க்குப் பின் கடந்த 14 ஆண்டுகளாக ஏன் அதனைச் செய்ய முடியவில்லை?
13ஆவது திருத்தத்தை மட்டுமல்ல,இலங்கைத் தீவில் இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்கள் சார்ந்த விடயங்களில்கூட இந்தியா விரும்பிக் கேட்ட எத்தனை விடயங்களை இலங்கை கொடுத்திருக்கிறது?கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியா கேட்டது.ஆனால் இலங்கை மேற்கு முனையத்தைத்தான் தருவேன் என்று கூறியது.தமிழர்களுக்கு என்று யாழ்பாணத்தில் இந்தியா ஒரு கலாச்சார மண்டபத்தை கட்டியது.ஆனால் அதனை முழுமையாக இயக்குவதற்கு உரிய ஏற்பாடுகளைச் செய்யுமாறு கொழும்பின்மீது அழுத்தங்களைப் பிரயோகிக்க ஏன் இந்தியாவால் முடியவில்லை? பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாகத் தரமுயர்த்த இன்றுவரை முடியவில்லை.காங்கேசன் துறையிலிருந்து தமிழகத்துக்கு கப்பலை ஓட விட இன்றுவரை முடியவில்லை.இப்படித்தான் இருக்கிறது இந்தியாவின் பிணைப்புத் திட்டங்கள்.
ஆனால் கடந்த வெள்ளிக்கிழமை புதிய பிணைப்பு திட்டங்கள் குறித்த ஒப்பந்தங்கள் எழுதப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.இந்தியாவிடமிருந்து மின்சாரம்,இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான எரிபொருள் விநியோகக் குழாய்களை உருவாக்குவது,இரு நாடுகளுக்கும் இடையில் பாலங் கட்டுவதற்கான வாய்ப்புக்களைப் பரிசீலிப்பது போன்ற திட்டங்கள் உரையாடப்பட்டுள்ளன. ஆனால் இவையாவும் முழுமையாக நிறைவேற்றப்பட்ட பின்னர்தான் எதைக் குறித்தும் கருத்துச் சொல்லலாம்.ஏனென்றால் கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக இந்தியா இலங்கைத்தீவில் விரும்பி கேட்ட எதையுமே முழுமையாகப் பெறமுடியவில்லை.அதுமட்டுமல்ல, அன்பாந்தோட்டையில் சீனா கிட்டத்தட்ட நூறாண்டுக்கு குந்தியிருக்கும். கொழும்பு துறைமுகத்திற்கு அருகே செயற்கைத்தீவில் அதாவது துறைமுக பட்டினத்தில் சீனப் பிரசன்னம் எப்பொழுதுமிருக்கும். இலங்கைத்தீவின் நவீன வரலாற்றில் சீனப் பிரசன்னம் அதிகரித்த காலகட்டம் என்று பார்த்தால் 2009க்கு பின்னரான கடந்த 14 ஆண்டுகள்தான்.தனது செல்வாக்கு மண்டலத்தில் காணப்படும் இச்சிறிய தீவில் சீன விரிவாக்கத்தைத் தடுக்க இந்தியாவால் முடியவில்லை.இச்சிறிய தீவு தனக்குள்ள கேந்திர முக்கியத்துவத்தின் அடிப்படையில் எல்லாப் பேரரசுகளையும் கெட்டித்தனமாக வெட்டியாண்டதன் விளைவாக சீனா தீவுக்குள் நுழைந்து விட்டது.
இவை அனைத்தையும் கூட்டிக்கழித்துப் பார்த்தால்,இந்தியா 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு இலங்கை மீது அழுத்தங்களைப் பிரயோகிக்காது என்பதனை ரணில் சரியாகவே கணித்திருப்பார். பொருளாதார நெருக்கடியின்போது நாட்டிற்கு முதலில் உதவியதும் அதிகம் உதவியதும் இந்தியாதான். அதன்மூலம் இந்தியா ஆறு உடன்படிக்கைகளைச் செய்து கொண்டது.அதாவது சிறிய இலங்கைத்தீவின் மீது அழுத்தங்களை பிரயோகிப்பதன்மூலம் இந்தியா பெற்றுக் கொண்டது இந்திய-இலங்கை உடன்படிக்கையைத்தான்.அதன்பின் இந்தியா பெற்றுக் கொண்டவை பெரும்பாலானவை இலங்கைதீவை அரவணைப்பதன்மூலம் பெற்றுக் கொண்டவைதான்.கடந்த ஆண்டிலும் அதுதான் நடந்தது. எனவே 13ஐ முழுமையாக அமல்படுத்துவதில் இந்தியாவுக்கு இருக்கும் வரையறைகளை அல்லது இயலாமைகளை ரணில் நன்கு தெரிந்து வைத்திருக்கிறார்.அந்தத் துணிச்சலில்தான் அவர் கூறுகிறார் 13 மைனஸைத்தான் தருவேன் என்று.
ஆயின் 13ஐ முழுமையாக அமல்படுத்தக் கேட்ட கட்சிகளும்,சிவில் சமூகங்களும்,சமஸ்டியைக் கேட்ட கட்சிகளும் சிவில் சமூகங்களும் அடுத்த கட்டமாக என்ன செய்யப்போகின்றன?இனப்பிரச்சினைக்குத் தீர்வு என்று அவர்கள் நம்பும் இறுதி இலக்கை நோக்கி போராடுவதற்கு அவர்கள் தயாரா?இந்தியாவோ, அமெரிக்காவோ, ஐநாவோ,அல்லது தந்தை செல்வா கூறியது போல கடவுளோ,யாராக இருந்தாலும் தமிழ்மக்களுக்குத் தங்கத் தட்டில் தீர்வை வைத்துத் தரப்போவதில்லை.போராடினால்தான் தீர்வு கிடைக்கும்.போராடியபடியால்தான் மூன்று தசாப்தங்களுக்கு முன்பு குறைந்தபட்சம் பதின்மூன்றாவது கிடைத்தது.
ஆனால் இப்பொழுது தமிழ் மக்களின் பேரபலம் இறங்கிவிட்டது என்று ரணில் நம்புகிறார்.”13ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவது;மாகாண சபைத் தேர்தலை நடத்துவது ஆகிய அதன் பொறுப்புகளை சிறீலங்கா பூர்த்திசெய்யும் என்று நம்புகிறோம்” என்று இந்திய பிரதமர் கூறியதை அவர் ஒரு சம்பிரதாயபூர்வமான, சடங்கார்த்தமான வேண்டுகோளாகவே விளங்கிக் கொள்வார். எதிர்க்கட்சிகள் எதிர்கின்றன,பிக்குகள் எதிர்க்கிறார்கள் என்று கூறிக்கொண்டு அவர் 13ஐ முழுமையாக அமுல்படுத்த மாட்டார்.
ஆனால் இந்தியா மேலும் புதிய கனெக்ரிவிற்றி-பிணைப்புத் திட்டங்களில் கவனத்தைக் குவிப்பதாகத் தெரிகிறது.கடல்வழிப் பிணைப்பு: தரை வழிப் பிணைப்பு; வான் வழிப் பிணைப்பு; சக்தி,மின்சார, எரிபொருட் பிணைப்பு; வலுசக்தி,வர்த்தகம் மற்றும் பொருளாதாரப் பிணைப்பு; நிதிப் பிணைப்பு; டிஜிற்றல் பிணைப்பு; மக்களுக்கும் மக்களுக்கும் இடையிலான பிணைப்பு…போன்ற இன்னோரன்ன பிணைப்புத் திட்டங்கள் தொடர்பாக இந்திய வெளியுறவுச் செயலர் பேசுகிறார்.ஏற்கனவே இந்தியா முன்னின்று தொடங்கிய தமிழ் மக்களுக்கும் தமிழகத்திற்கும் இடையிலான பிணைப்புத் திட்டங்கள் அரைகுறையாகத் தொங்கிக்கொண்டிருக்கும் ஒரு பின்னணியில்,புதிய பிணைப்புத் திட்டங்களின்மீது இந்தியா கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டதா? இனப்பிரச்சினைக்கான தீர்வின் மீதான இந்தியாவின் கவனக்குவிப்பைத் திசை திருப்ப மேற்படி பிணைப்புத் திட்டங்கள் இலங்கைக்கு உதவுமா?