உலக பொருளாதார நெருக்கடியினால் நாடு பொருளாதார சவால்களை எதிர்கொள்ள நேரிட்டாலும் வறிய மக்களின் நலனுக்கு அரசு முன்னுரிமை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
கொழும்பு மத்திய வங்கியின் கேட்போர் கூடத்தில் இன்று (28)இடம்பெற்ற பேண்தகு நிதி தொடர்பான செயலமர்வின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இவ்வாறு தெரிவித்தார்.
சுமார் முப்பது சதவீதமான நாட்டு மக்கள் பாரிய பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுப்பதுடன், 2017ஆம் ஆண்டினை வறுமையை இல்லாதொழிக்கும் ஆண்டாக அரசு பிரகடனப்படுத்தியுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி அதனை வெற்றிகரமாகச் செயற்படுத்துவதற்கு நிதித்துறையைச் சார்ந்த சகலரினதும் ஒத்துழைப்பினை எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.
பொருளாதார சவால்களை வெற்றிகொள்வதில் சூழல் பாதுகாப்பும் மிக முக்கியமாகும் என்பதைச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அவர்கள், பேண்தகு அபிவிருத்தி கொள்கை முகாமைத்துவம் தொடர்பாக அனைத்து துறைகளையும் சார்ந்த புத்திஜீவிகளினதும், நிபுணர்களினதும் வழிகாட்டல் அவசியமாகுமென குறிப்பிட்டார்.