பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்றிகோ டூரேரெ (Rodrigo Duterte )ஜெர்மனியிடம் மன்னிப்பு கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜெர்மனிய முதியவர் ஒருவர் அண்மையில் பிலிப்பைன்ஸில் தலைதுண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார். அபு சாயிப் தீவிரவாதிகளினால் இவ்வாறு ஜெர்மனிய பிரஜை படுகொலை செய்யப்பட்டிருந்தார். இந்த சம்பவம் தொடர்பிலேயே பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி மன்னிப்பு கோரியுள்ளார்.
ஜெர்மனிய பிரஜையை கடத்திய தீவிரவாதிகள் கப்பம் கோரியிருந்தனர். எனினும் கப்பத் தொகையை வழங்க முடியாது என ஜனாதிபதி ரொட்றிகோ திட்டவட்டமாக அறிவித்திருந்தார். 70 வயதான Jurgen Gustav Kantner என்ற ஜெர்மனியரே தீவிரவாதிகளினால் கொலை செய்யப்பட்டிருந்தார். குறித்த ஜெர்மனியரை விடுதலை செய்ய 600,000 அமெரிக்க டொலர்களை தீவிரவாதிகள் கோரியிருந்தனர்.
இந்த சம்பவத்திற்கு ஜெர்மனிய அதிபர் அன்ஜலா மோர்கல் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.