முல்லைத்தீவு மாவட்ட முன்னாள் நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு உயிர் அச்சுறுத்தல் அல்லது வேறு எந்த வகையிலும் அச்சுறுத்தல் விடுக்கப்படவில்லையெனவும் , அவரது திடீர் வெளிநாடுப் பயணமானது முன்கூட்டியே திட்டமிடப்பட்டது எனவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) டிஜிட்டல் தடயவியல் பிரிவு அரசாங்கத்திடம் சமர்ப்பித்த அறிக்கையின்படி இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 25ஆம் தேதி இந்தியா செல்வதற்கு நீதிபதி விடுப்பு கோரி விண்ணப்பித்தபோது, அதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, செப்டம்பர் 24ஆம் தேதி அவர் திடீரென வேறு நாட்டிற்குப் புறப்பட்டுச் சென்றுவிட்டார் என்று அந்த அறிக்கை கூறுகிறது.
குறித்த சம்பவத்தின் பின்னணியில் ஒழுங்கமைக்கப்பட்ட ஏதேனும் குழுக்களின் செல்வாக்கு இருக்கிறதா என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
உயிரச்சுறுத்தல் காரணமாக நீதிபதி சரவணராஜா பதவியை இராஜினாமா செய்தது தொடர்பில் முழுமையான விசாரணை நடாத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவுறுத்தியுள்ளார்.