ஜனாதிபதி கூறியிருப்பது போன்று, எதிர்வரும் நான்காம் திகதிக்கு முன்பாக கேப்பாப்பிலவு மற்றும் புதுக்குடியிருப்பு காணிகள் விடுவிக்கப்படவில்லை எனில், எதிர்வரும் எட்டாம் திகதியன்று, வடக்கு, கிழக்கு தழுவிய ரீதியில், ஹர்த்தால் நடத்துவதென்றும் அதன் பின்னர் கேப்பாப்பிலவு நோக்கி வாகனப் பேரணியொன்றை நடத்துவதென்றும், தமிழ் மக்கள் பேரவையினால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில், கேப்பாப்பிலவு, பிலக்குடியிருப்பு மற்றும் புதுக்குடியிருப்பு மக்களின் போராட்டங்களை வலுப்படுத்தல் தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று, செவ்வாய்க்கிழமை (28) நடைபெற்றது.
இதில், தமிழ் மக்கள் பேரவையின் அங்கத்தவர்கள் மற்றும் யாழ். மாவட்டப் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது, மக்களின் போராட்டங்கள் தெர்ர்பாகவும் ஆராயப்பட்டு, அனைவரதும் ஏகோபித்த முடிவாக, மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இக்கலந்தாலோசனைக் கூட்டத்தில், கேப்பாப்பிலவுவு மற்றும் புதுக்குடியிருப்பு மக்களின் காணிகள் விடுவிப்பு சம்பந்தமாகவும் ஒட்டுமொத்தமாக, இன்னமும் அரச படைகளிடம் இருக்கின்ற பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் விடுவிப்புத் தொடர்பாகவும் பேசப்பட்டது. என்பதும் குறிப்பிடத்தக்கது.