ஐக்கிய நாடுகள் அமைப்பில் இலங்கை அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு பிரித்தானியா அழுத்தம் கொடுக்க வேண்டுமென தொழிற்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் அமுல்படுத்தப்பட வேண்டியது அவசியமானது என தெரிவித்துள்ளது.
நீதியை நிலைநாட்டுதல், குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் ஆகிய விடயங்கள் குறித்து இலங்கை அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளது. பாராளுமன்றில் நடைபெற்ற தமிழ்ஸ் போ லேபர்ஸ் நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய தொழிற்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் மெக்டொனெல் ( John Mcdonal) இதனைத் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தீர்மானங்களை மலினப்படுத்தும் வகையில் இலங்கை அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது என குற்றம் சுமத்தியுள்ள அவர் உண்மையை கண்டறிதல் மற்றும் நீதியை நிலைநாட்டுதல் போன்ற விடயங்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளை சமாளிக்கும் முயற்சியில் இலங்கை அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாகவும் இதனை தடுத்து நிறுத்த பிரித்தானியா நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை அரசாங்கம் உள்ளக ரீதியான விசாரணைகளை நடத்த அனுமதிக்க முடியாது எனவும் அது சுயாதீனமான விசாரணைகளாக அமையாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.