யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி கல்வி அமைச்சின் ஆய்வு அபிவிருத்திப் பிரிவுடன் இணைந்து நடாத்துகின்ற கல்வியியலில் செயல்நிலை ஆய்வு மாநாடானது நேற்று திங்கட்கிழமை யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி அரங்கில் நடைபெற்றது.
கல்வியியற் கல்லூரி வரலாற்றில் முதல் முதலாக தமிழ்மொழி மூலம் நடைபெற்ற கல்வியியலில் செயல்நிலை ஆய்வு மாநாடு இதுவாகும்.
இந்த ஆய்வு மாநாட்டுக்கு பிரதம விருந்தினராக வவுனியா பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் மங்களேஸ்வரன் கலந்துகொண்டதுடன், முதன்மைப் பேச்சாளராக திறந்த பல்கலைக்கழக ஓய்வுநிலை கல்வி பீட பேராசிரியர் மேனாள் பீடாதிபதி சசிகலா குகமூர்த்தி உரையாற்றினார்.
இம்மாநாட்டின் இருக்கை விருந்தினர்களாக யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்வியியற்துறைத் தலைவர் கலாநிதி ஜெயலட்சுமி இராசநாயகம் மற்றும் கல்வியியற்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஆனந்தமயில் நித்திலவர்ணன் மற்றும் திறந்த பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ராஜினி சுப்பிரமணியசர்மா ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்.
செயல்நிலை ஆய்வு மாநாட்டில் யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியில் பயிற்சியைப் பூர்த்தி செய்த ஆசிரிய மாணவர்களாகிய ஸ்ரீதரன் வித்தகி, நுகு லெபி சாஜிதா மரியம், ரவீந்திரகுமார் டல்சாலினி, டினா திவ்வியமலர் கிறிஸ்டி தவசீலன், காயத்திரி மகேந்திரன், தவராசா நிசாந்தினி, எம்.எஸ்.பாத்திமா சுமைகா, மகாலிங்கம் டர்சிகன், குணசேகரம் கஸ்தூரி, சண்முகநாதன் தேகசுகன் ஆகிய 10 பேர் ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பித்தனர்.