363
வடக்கு மாகாணத்தில் காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறை, இடமாற்றங்கள் வழங்கப்படாமை, அதிபர் நியமனங்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கம் மற்றும் வட மாகாண கடமை நிறைவேற்று அதிபர்கள் சங்கம் ஆகியவற்றின் உறுப்பினர்கள், வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸை தனித்தனியாக சந்தித்து கோரிக்கைகளை சமர்பித்தனர்.
இதன்போது வடக்கு மாகாண கல்விச் செயலாளர் பெற்றிக் நிரஞ்சனும் சமூகமளித்திருந்தார்.
யாழ்ப்பாணத்திலுள்ள வடக்கு மாகாண ஆளுநரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இந்த சந்திப்புகள் இடம்பெற்றன.
புதிய அதிபர் நியமனத்தால், இதுவரை பதில் கடமை ஆற்றியவர்கள்பாதிப்புக்குள்ளகி யுள்ளதாகவும், கடினமான காலப்பகுதியில் பாடசாலை சமூகத்தை கட்டியெழுப்ப பாரிய முயற்சிகளை மேற்கொண்டதாகவும் வட மாகாண கடமை நிறைவேற்று அதிபர்கள் சங்கம், ஆளுநரிடம் தெரிவித்தனர்.
போட்டிப் பரீட்சையூடாக தெரிவு செய்யப்பட்ட அதிபர்களுக்கான நியமன கடிதங்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த வாரம் அவர்கள் கடமைகளை பொறுப்பேற்கவுள்ளனர். இதனால் பல வருடங்களாக பதில் கடமை புரிந்த அதிபர்கள், உள ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பாதிக்கப்படுவதாக அவர்கள் கூறினர்.
இந்நிலையில் ஏனைய மாகாணங்களில் நிலவும் அதிபர் வெற்றிடங்களுக்கு தங்களை நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறும் வட மாகாண கடமை நிறைவேற்று அதிபர்கள் சங்கத்தினர் கோரிக்கை முன்வைத்தனர். விடயங்களை கேட்டறிந்த வடக்கு மாகாண ஆளுநர், கோரிக்கைகளை பரிசீலிப்பதாகவும், தேவை ஏற்படின் ஜனாதிபதியின் கவனத்திற்கும் விடயங்களை கொண்டு செல்வதாகவும் தெரிவித்தார்.
Spread the love