ராணுவத்தில் துன்புறுத்தப்படுவதாக நேர்காணல் வழங்கிய கேரள வீரர் ராய் மேத்யூ மர்மமானமுறையில் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. கேரளாவைச் சேர்ந்த ராய் மேத்யூ மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தியோலாலி ராணுவ முகாமில் பணி யாற்றி வந்தார்.
இவர் அண்மையில் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கியிருந்த நேர்காணலின் போது ,உயரதிகாரிகளால் ராணுவ வீரர்கள் எப்படி துன்புறுத்தப்படுகின்றனர் என தனது முகத்தை மறைத்தபடி தெரி வித்திருந்தார். குறித்த ஒளிப்பதிவு வெளியாகாது என அந்த பத்திரிகையாளர் கொடுத்த வாக்குறுதியை நம்பி ராணுவ முகாம்களில் நடக்கும் துன்புறுத்தல்கள் குறித்து அவர் விவரித்தார்.
எனினும் அந்த ஒளிப்பதிவு திடீரென சமூக வலைதளங்களில் வெளிவந்ததுடன் விசாரணைக்கும் உத்தர விடப்பட்டிருந்தது. இந்த வீடியோ கடந்த மாதம் 25ம் திகதி வெளியானது. அப்போது முதல் மேத்யூ காணாமல் போயிருந்தார் எனவும் அன்றுதான் அவர் இறுதியாக குடும்பத்தினரிடமும் பேசியுள்ளார எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நேர்காணல் மூலம் தனது வேலை பறிபோக வாய்ப்பு இருப்பதாகவும், கடுமையான பின் விளைவுகளை சந்திக்க வேண்டியதிருக்கும் எனத் தெரிவித்ததாகவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் முகாமின் அறை ஒன்றில் மின்விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவரது உடலை போலீஸார் கண்டெடுத்துள்ளனர். அவர் உயிரிழந்து 3 நாட்களுக்கு மேல் ஆகியிருக்கலாம் என போலீஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.