363
நன்னடத்தை பாடசாலையில் சிறுவன் உயிாிழந்தமை தொடர்பில் கைதான அப்பாடசாலையின் மேற்பார்வையாளரான பெண்ணை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறும் அது தொடர்பான வழக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 17 ஆம் திகதி வரை மறு விசாரணைக்காக ஒத்தி வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக காவல்முறைப் பிரிவிற்குட்பட்ட சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் தங்க வைக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த சிறுவனின் மரணம் தொடர்பில் அப்பாடசாலையின் மேற்பார்வையாளரான பெண் சந்தேகத்தில் கல்முனை தலைமையக காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட பின்னர் புதன்கிழமை(3) மீண்டும் கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.
குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது மரணமடைந்த சிறுவனின் தந்தை சகோதரி ஆகியோர் நீதிமன்ற வளாகத்திற்கு வருகை தந்திருந்ததுடன் காவல்துறையினா் மற்றும் பிரதிவாதியின் சட்டத்தரணி ஆகியோரின் விண்ணப்பங்கள் ஆராயப்பட்டு 28 வயதுடைய குறித்த பாடசாலையின் மேற்பார்வையாளரான பிறின்ஸி புலேந்திரன் என்பவரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை மத்ரஸா பாடசாலை மாணவனின் மர்ம உயிரிழப்பு தொடர்பில் கைதான மௌலவியை மீண்டும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கு வியாழக்கிழமை (04) கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் சம்சுதீன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட நிலையில் காவல்துறையினரின் சமர்ப்பணங்கள் மற்றும் பாதிக்கபட்ட தரப்பினர் சார்பாக முன்னிலையான சட்டத்தரணிகள் உட்பட ஏனைய விடயங்களை ஆராய்ந்த நீதிவான் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
Spread the love