யாழ்ப்பாணம் சங்குவேலி பகுதியில் வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடாத்தி பல இலட்ச ரூபாய் பெறுமதியான சொத்துக்களுக்கு நாசம் விளைவித்த குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் நேற்றைய தினம் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
சங்குவேலியில் உள்ள வீடொன்றினுள் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை வன்முறை கும்பல் ஒன்று அத்துமீறி நுழைந்து வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள், கதவுகள் என்பவற்றை அடித்து உடைத்து சேதமாக்கியத்துடன், வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் 08 இலட்ச ரூபாய் பெறுமதியான மோட்டார் சைக்கிள் ஒன்றினையும் தீயிட்டு கொளுத்தி விட்டு தப்பி சென்று இருந்தது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வந்த காவற்துறையினர் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவரை கைது செய்துள்ளதுடன் , தாக்குதலுடன் தொடர்புடைய ஏனையவர்களை அடையாளம் கண்டுள்ள நிலையில் அவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.