153
ஆடியமாவாசை…
பிண்டமாய் போன
அப்பாவுக்கு
கண்ணீரில்
எள்ளுத் தண்ணி
இறைத்த என் இடம் நிரப்ப
வருவான் ஒரு பாலன்….
அப்பா பெயர், நட்சத்திரம்
மழலையாய் உதிரும்
இந்த வயதில்
இவனுக்கு ஆடியமாவாசை
எந்தன் கண்ணீரும் உறையும்
‘தகப்பனைத் தின்னி’
பிள்ளையின்
எள்ளுத் தண்ணீராய்
கண்ணீரைத் தந்தபடி
கூட இருந்த
தாய் விளக்கம்…
‘அவர் காணாமல் போகையில்
இவன் வயிற்றில்…
தேடுறம் தேடுறமெண்டு…
இனித் தேட ஏலாதெண்டு’
திண்டவனைக் காப்பாற்றும்
ஆணைக் குழுக்கள் முடிவாக்கும்
இன்னும்
எத்தனை வருஷங்கள்
இவன் நோன்பு…
இவன் போல்
இன்னும் எத்தனை எத்தனை
தகப்பன் தின்னிகளோ!…
ஆடி அமாவாசைகள்
வந்து வந்து போகும்…
திண்ட பேய்களுக்கு
பெரும் பிண்டம் எறியும் நாள்
என்று வந்து சேரும்!
–சண்முகபாரதி
Spread the love