பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை உடனடியாக மீளப்பெறுமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
இலங்கை அரசாங்கம் முன்வைத்துள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அதீத கவனம் செலுத்தியுள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகத்தின் ஊடகப்பேச்சாளர் ராவின் ஷம்டாசனி அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.
தற்போது காணப்படும் பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு பதிலாக, இலங்கை அரசாங்கம் முன்வைத்துள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தியுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்து செய்வது இலங்கையின் உள்ளகப் பாதுகாப்பு தொடர்பிலான சிறந்த மறுசீரமைப்பின் ஓர் முயற்சியாக காணப்பட்டாலும், உத்தேச புதிய சட்டமூலம் ஊடாக கடந்த காலத்தில் இருந்து நிலவிய மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான விடயங்கள் அவ்வாறே இடம்பெறும் அபாயம் காணப்படுவதாகவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.