யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக வேலை கோரி போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள பட்டதாரிகளின் போராட்டத்திற்கு யாழ்.காவல்துறையினர் தடையுத்தரவு வாங்கி இருந்தமை தெரிய வந்துள்ளது. யாழ்ப்பணத்திற்கு நேற்றைய தினம் விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதியின் கவனத்தை ஈர்க்குமுகமாக மாவட்ட செயலகம் முன்பு வேலைகோரி பட்டதாரிகளும் . காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு பொறுப்பு கூற கோரி அவர்களின் உறவினர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர்.
ஜனதிபதி தம்மை சந்திக்காது மாற்று பாதையூடாக சென்றமையால் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் யாழ்.கண்டி நெடுஞ்சாலையை மறித்து வடமாகாண உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் போராட்டத்தை நடத்தினர்.
குறித்த போராட்டத்திற்கு தடை கோர யாழ்.நீதிவான் நீதிமன்றின் நீதிவானின் வாசஸ்தலத்திற்கு சென்ற காவல்துறை அதிகாரிகள் வேலை கோரி போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கும் பட்டதாரிகளின் போராட்டத்திற்கே தடையுத்தரவு வாங்கி வந்து இருந்தனர்.
தாம் வாங்கி வந்த தடையுத்தரவை , யாழ்.மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் கஸ்ரன் ஸ்ரனிஸ்லஷிடம் கையளித்தனர். அதனை வாங்கி வாசித்த சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் அதனை கொண்டுவந்த காவல்துறை அதிகாரியிடமே திருப்பி கொடுத்து அனுப்பினார்.
இதேபோன்றே சுதந்திரதினத்தன்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சிவாஜிலிங்கம் தலைமையில் போராட்டம் நடாத்திய வேளை மீனவர் பிரச்சனை தொடர்பான கூட்டம் நடைபெறுவதாக கூறி அதற்கு நீதிமன்ற தடையுத்தரவு வாங்கி வந்திருந்தனர்.
குறித்த தடையுத்தரவை சிவாஜிலிங்கத்திடம் கொடுத்த போது , இங்கே நடப்பது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் , மீனவர்கள் பிரச்சனை தொடர்பில் இங்கே கதைக்கவில்லை என கூறி நீதிமன்ற தடையுத்தரவை வாங்க மறுத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.