ஜனாதிபதி தேர்தலுக்கான திகதியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மறைமுகமான முறையில் அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார். அதனடிப்படையில் ஒக்டோபர் முதல் வாரத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கெடுப்பு நடத்தப்படும்.
ஜானாதிபதி தேர்தலுக்கான பிரசாரம் வெசாக் நிறைவடைந்தவுடன் ஆரம்பமாகும் என தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, இந்த ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டிய நிலை ஏற்பட்டாலும், செப்டம்பர் 17 முதல் ஒக்டோபர் 17 வரையான காலப்பகுதிக்குள் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக பாராளுமன்றத் தேர்தலை நடத்த வேண்டும் என ஆளும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.
இது குறித்து கருத்து தெரிவித்த தேர்தல் ஆணைக்குழு தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க, இந்த வருடம் ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்தால் பாராளுமன்ற தேர்தலை நடத்துவதை தவிர வேறு வழியில்லை.
எனினும், நாடாளுமன்றத் தேர்தலை நடத்த வேண்டியிருந்தால் அது ஜனாதிபதித் தேர்தலில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது எனவும், அதனைத் தொடர்ந்து உரிய நேரத்தில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
“இந்த ஆண்டு செப்டம்பர் 17 முதல் ஒக்டோபர் 17 வரை ஜனாதிபதி தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஜூலை மாத இறுதியில் அல்லது ஆகஸ்ட் தொடக்கத்தில் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும். தற்போது அதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளோம்” என்றார்.