ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரையை சட்டமா அதிபர் திணைக்களம் நடைமுறைப்படுத்தியுள்ளதாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்து விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழு, சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் பொலிஸ் போன்ற பல்வேறு நிறுவனங்களுக்கு பரிந்துரைகளை வழங்கியது.
சட்டமா அதிபர் திணைக்களத்தினால் இதுவரை 79 பேருக்கு எதிராக 41 நீதிமன்ற வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. பொலிஸ் போன்ற ஏனைய நிறுவனங்களும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஏனைய பரிந்துரைகளை அமுல்படுத்துவது இன்றியமையாதது என அமைச்சர் தெரிவித்தார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவரை தாம் அறிந்திருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் தெரிவித்த கருத்து தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களம் ஏற்கனவே சட்ட நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக சபைத் தலைவர் சுசில் பிரேமஜயந்த நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இதேவேளை, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் தனக்கு தெரிந்த அனைத்தையும் முன்னாள் ஜனாதிபதி வெளிப்படுத்த வேண்டுமென சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்த ஜயவர்தன கோரிக்கை விடுத்துள்ளார்.
“ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்து முன்னாள் ஜனாதிபதிக்கு என்ன தெரியும் என்பதை அவரிடமிருந்து அறிந்து நாடாளுமன்றத்தில் தெரிவிக்க சபாநாயகருக்கு உரிமை உண்டு, என்றும் அவர் கூறினார்.