யாழ்ப்பாணத்தில் கஞ்சா கடத்தலில் ஈடுபடும் பாரிய வலைப்பின்னல் தொடர்பிலான தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் , அவர்களின் வங்கி கணக்குகளை முடக்கி , அவர்களின் சொத்துக்களையும் முடக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த 30ஆம் திகதி சாவகச்சேரி காவற்துறைப் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 4 கிலோ கஞ்சா போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களை விசாரணைகளின் பின்னர் மறுநாள் சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் முற்படுத்தி , சந்தேகநபர்களை 07 நாட்கள் காவற்துறை தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய அனுமதி கோரி மன்றில் காவற்துறையினர் விண்ணப்பம் செய்தனர்.
காவற்துறையினரின் விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்ட மன்று , இரு சந்தேகநபர்களை காவற்துறை தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய அனுமதி அளித்தது.
அவர்களை காவல் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் , அவர்களிடம் பெற்ற தகவலின் அடிப்படையில் காவற்துறையினர் சிறப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அதன் பிரகாரம் நேற்றைய தினம் சனிக்கிழமை அதிகாலை செம்மணி பகுதியில் சிறிய ரக ஒலிபெருக்கி சாதனத்தினுள் (BOX) கஞ்சாவை மறைத்து மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்ற நபரை காவற்துறையினர் கைது செய்தனர். அவரிடம் இருந்து 2 கிலோ கஞ்சாவை மீட்டனர்.
குறித்த சந்தேகநபரிடம் முன்னெடுத்த விசாரணையின் அடிப்படையில் மன்னார் பகுதியில் உள்ள வீடொன்றினை காவற்துறையினர் முற்றுகையிட்டு சோதனையிட்ட போது , வீட்டின் வளவினுள் சுமார் ஒன்றரை அடி ஆழமான கிடங்கில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 16 கிலோ கஞ்சாவை மீட்டனர். அதனை அடுத்து வீட்டில் இருந்த இரு இளைஞர்களை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட மூவரையும் யாழ்ப்பாண காவல் நிலையத்தில் தடுத்து வைத்து தீவிர விசாரணைகளை காவற்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.
சாவகச்சேரியில் கைது செய்யப்பட்ட இருவர் மற்றும் நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட மூவர் என ஐவரின் வங்கி கணக்குகள் மற்றும் சொத்து விபரங்கள் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்து, அவற்றினை முடக்குவதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்னர்.
அதேவேளை கைது செய்யப்பட்ட ஐவரிடமும் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் அவர்களின் வலைப்பின்னலில் இயங்கி வரும் ஏனையோரை அடையாளம் கண்டுள்ளதாகவும் , அவர்களை கைது செய்வதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.