வெளிநாடு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ள வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த வர்த்தகர் போலி கடவுச்சீட்டில் தாய்லாந்து செல்ல முற்பட்ட போது கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பில் வசிக்கும் 64 வயதுடைய வர்த்தகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று அதிகாலை குறித்த வா்த்தகா் தாய் ஏர்லைன்ஸின் டி.ஜி. – 308 ரக விமானத்தில் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை சென்றடைந்த போது, குடிவரவு எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
போலி ஆவணங்களை தயாரித்து நபர் ஒருவரை இத்தாலிக்கு அனுப்ப முயற்சித்த சம்பவம் தொடர்பில் குறித்த வர்த்தகா் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவருக்கு எதிராக வெளிநாட்டுப் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.