நீண்ட இடைவெளிகளின் பின்னர் யாழ் மண்ணிலே சத்தியசோதனை என்கின்ற குழந்தை ம.சண்முகலிங்கம் அவர்களால் எழுதப்பட்ட நாடகம் அரங்கேறியது. சித்திரை மாத இறுதி வாரத்திலே சுண்டிக்குளி மகளீர் கல்லூரி, யாழ் பரியோவான் கல்லூரி, யாழ்ப்பாணம் மத்தியகல்லூரி, கொக்குவில் தேசிய கலை இலக்கியப் பேரவை, திருமறைக்கலாமன்றம் ஆகிய அரங்குகளிலே ஆறு தடவைகள் மேடையேற்றப்பட்டன. மேடை நாடகங்களில் இருந்து சற்று அந்நியப்பட்டுப்போயிருக்கின்ற இக்கால இரசிகர்களுக்கு இந்த ஆற்றுகை வரப்பிரசாதமாக அமைந்திருந்தது என்பது உண்மை.
இந்த நாடகமானது 40 ஆண்டுகளுக்கு முன்னர் குழந்தை அவர்களால் எழுதப்பட்டு கலாநிதி க.சிதம்பரநாதன் அவர்களால் நெறியாள்கை செய்யப்பட்டு யாழ் பரியோவான் கல்லூரியிலும் வேறு மேடைகளிலும் பல தடவைகள் ஆற்றுகை செய்யப்பட்டது. இன்று மீளவும் கிழக்குப் பல்கலைக்கழகப் பேராசிரியர் சி.ஜெயசங்கர் அவர்களால் நெறியாள்கை செய்யப்பட்டு கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறை மாணவர்களால் ஆற்றுகை செய்யப்பட்டிருந்தது.
குழந்தை அவர்களுக்கே இயல்பான மிக இலகுவான வார்த்தைகளால், சமூகத்தை கணம் மாறாமல் படம்பிடித்துக்காட்டுகின்ற நாடக எழுத்துரு நாடகத்தின் கருப்பொருளை மிக இலகுவாக சமூகத்துக்குக் கடத்த வாய்ப்பாக அமைந்திருந்தது. தவிர இலகுவான இயல்பான அசைவியக்கங்கள், இயல்பாக எவரும் விடயத்தைப்புரிந்து கொள்ளும் வகையிலே ஆற்றுகைப்படுத்தப்பட்டது நெறியாளருடைய ஆளுமையின் பிரதிபலிப்பினைத் தரிசிக்கமுடிந்தது.
நாற்பது வருடங்கள் கடந்தும் அதே சமூகப்பிரச்சினை சமூகத்தில் பேசப்படவேண்டிய ஒரு பொருளாக இன்றும் நம்மத்தியில் இருந்து கொண்டிருப்பது நமது சமூகத்தின் இறுக்கிப்போயுள்ள தன்மையினை வெளிப்படுத்தியிருந்தது. 40 வருடங்களுக்கு முன்னர் பேசப்பட்ட விடயம் இன்று இன்னும் சிக்கல் நிறைந்திருப்பதை நாங்கள் உணர முடிகின்றது. இன்று மேடை நாடகங்களாகட்டும், ஆற்றுகைகளாகட்டும் வறண்டுபோயிருப்பதற்கு இந்த சமூகச்சிக்கலும் முக்கிமான ஒரு காரணமாகின்றது. வெறுமே புத்தகப்பூச்சிகளாக, பரீட்சை என்கின்ற பந்தையத்திலே சவாரிக்கு விடுகின்ற குதிரைகளாக எம்முடைய குழந்தைகள் பல அழுத்தங்களோடு ஓடிக்கொண்டிருக்கின்றார்கள். இந்த ஓட்டப்பந்தையத்திலே மருத்துவம், எந்திரி பட்டங்களைப் பெற்றவர்கள் சாதனையாளர்களாகவும், மற்றவர்கள் அனைவரும் சமூகத்திலே படிப்பறிவற்றவர்களாகவும், சமூய யதார்த்தப் பேச்சிலே குறிப்பிடுவதானால் மக்குகளாகவும் கொள்ளப்படுகிறார்கள். இந்த முடிவுகள் மாணவர்கள் சார்ந்து சமூகம் திணிக்கின்ற ஒரு சுமையாகவே இன்றும் எமது சமூகத்திலே பிரதான கருப்பொருளாக வாழ்வின் சாரமாக குழந்தைகள் மத்தியிலே கடத்தப்பட்டு வருகின்றது. இந்த பட்டங்களைப் பெற்று வெற்றியாளர்களாகத்தம்மை சமூகத்திலே நிலைப்படுத்திக்கொள்ள குழந்தைகளுடைய தூயமனங்களிலே குட்டிமுந்துதல், அழுக்காறு, போட்டி, பொறாமை, களவு போன்ற பல துர்இயல்புகள் முந்துவதற்கான கருவிகளாக பதியப்படுகின்றது. இது எத்தனை தூரம் வக்கிரமான ஒரு சமூகத்தினுடைய முகிழ்ப்புக்கு வழிகோலுகின்றது என்பனை நாங்கள் சற்றும் சிந்திக்கவில்லை. இந்த சிக்கல்கள் எல்லாவற்றையும் இந்த ஆற்றுகை இயல்பாக வெளிப்படுத்திநிற்கின்றது.
குழந்தைகள் சார்ந்து சமூகம் கவனமாக சிந்திக்கவேண்டிய சூழ்நிலையின் அவசியத்தை இந்த ஆற்றுகை மீளவும் சமூகத்தின் மத்தியிலே கேள்வி எழுப்புகின்றது. இந்த ஆற்றுகை இன்னும் பல இடங்களிலும், சமூகம் பற்றிச் சிந்திப்பவர்கள், கல்விக்கொள்கைகளை, கோட்பாடுகளை தீர்மானிப்பவர்கள் போன்றவர்களுடைய கவனத்திற்கும் எடுத்துச் செல்லப்படவேண்டியது அவசியம்.
நாம் எமக்கான கல்வியை சுயமாக, எம்முடைய தளங்களிலே நின்று, எம்மைச் செழுமைப்படுத்தும் வகையிலே, சுயத்தோடும், மானுடத்துவம்மிக்க சமூகத்தைக் கட்டியெழுப்பவல்ல கொள்கைகளுக்குள் அடுத்த சமூகத்தை இணைக்க, பயணிக்கவேண்டும்.
கலாநிதி சுகன்யா அரவிந்தன்,
முதுநிலை விரிவுரையாளர்,
இசைத்துறை, யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம்.