புலனாய்வுப் பிரிவின் உறுப்பினர்களுக்காக மட்டும் சட்டத்தை வேறு விதமாக அமுல்படுத்த முடியாது என முன்னாள் இராணுவத் தளபதி, அமைச்சர் பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இராணுவப் புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றிய ஒரு சிலரை கைது செய்வதனால் இராணுவமோ அல்லது புலனாய்வுப் பிரிவோ சீர்குலைந்துவிடாது என கொழும்பில் நேற்றைய தினம் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மற்றும் படைவீரர்கள் அனைவரும் நாட்டின் சட்ட திட்டங்களுக்கு அப்பால்பட்டவர்கள் கிடையாது என சுட்டிக்காட்டியுள்ள அவர் நாட்டின் சட்டம் அனைவருக்கும் பொதுவானது என்பதனை நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டுமெனவும் சட்டத்தை மீறிச் செயற்பட எவருக்கும் உரிமை கிடையாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தாம் இராணுவத் தளபதியாக கடமையாற்றிய காலத்தில் கொழும்பில் புலனாய்வு நடவடிக்கைகளை முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸவே மேற்கொண்டார் என அவர் தெரிவித்துள்ளார்.