கதிர்காமக் கந்தனை நோக்கி நடை பெறும் பயணம் பற்றிய குறிப்புக்கள் அனைத்தும் ஏற்றுக் கொள்ளக்கூடியவைகளே. நாங்கள் அறிய இன்னும் எத்தனையோ வாய்மொழி மூல அதிசயங்கள், அக் காலத்திலிருந்து சென்ற வருடம் வரை உள்ளன.
அத்தோடு கதிர்காமக் கந்தனிடம் கால் நடையாகச் செல்லும் மனிதர்களுகட்கு எவ்வித கட்டுப்பாடுகளுமில்லாத, சுதந்திரமான கால் நடை பயணம் அது.
நடையில் ஈடுபடும் பக்தர்கள் தமது பயணம் பற்றிய ஏற்பாடுகளை முற்கூட்டியே திட்டமிடுவது, கடவுளுக்கு முன் யாவரும் சமம். பிறந்த குழந்தைகளில் இருந்து இறக்கப்போகும் மனிதர்கள் வரை. யாவருக்கும் முழு உரிமை உண்டு. இறைவழிபாட்டிற்கு மனச் சுத்தம் போதும். ‘உள்ளம் பெருங்கோயில் .’ திரு மூலரின் திருமந்திரம் கூறுவதும் இதுவே.
அத்தோடு கந்தனை நோக்கி நடக்கும் காட்டுவழிப் பயணமானது உடல், உள, சுகாதாரத்திற்காகவும் பக்தியின்பால் கொண்ட அதீத நம்பிக்கையுடனும்;, நோய் தீரவும் பலவிதமான நேத்திக்கடன்களை நிறை வேற்றவும் மேற் கொள்ளும் பயணம். ஆதலால் வயது வித்தியாசமின்றி யாவரும் நடக்கின்றனர்.
காட்டுப் பாதைகளில் உள்ள ஆறுகளில் தலை முழுகிச் சென்று இறுதியில் மாணிக்க கங்கையில் முழுகுவது உடல் உள திருப்தியுடன், நேத்திக் கடன் செலுத்தும் சடங்காகவே இவ் யாத்திரை பேணப்படுகிறது.
காட்டுவழிப் பாதையில் குறிஞ்சா இலை பறித்து சுண்டி உண்பதும், வெள்ளி முள்ளு பாதையில் உப்புருவி இலை பறித்துச் சுண்டி உண்பதும் நோய் தீர்ந்து உடல் வலிமை பெறும் உணவுகள் என்பது உண்மை.
நடைபாதையில் அனைவரும் ‘அரோகரா’ என்று கூக்குரலில் சத்தமிட்டும் தேவாரம் பாடியும் மணி ஓசையுடனும் காவடியுடனும் கந்தர் சஸ்டி கவசம் படித்தும் வள்ளி மணாளன் காவியம் பாடிச் செல்வதும் உடன் பயணிப்போரை வயதிற்கேற்ப சின்னசாமி, பெரியசாமி என்றழைப்பதும் வரலாற்றுப் பண்பாடாக உள்ளது.
யாத்திரை செல்வோரில் இளம் பெண்கள், ஆண்கள், சிறுவர்கள், வைத்தியர்கள், தாதியர்கள், பரிசாரிமார்கள், சமூக சேவையாளர்கள், என பலரும் இணைந்து செல்வதால் யாத்திரையின்போது பாதிப்புக்கள் ஏற்பட்டால் ஒருவருக்கொருவர் உதவி செய்யக்கூடியதாக உள்ளது.
தற்போது இராணுவ சிப்பாய்கள் கூட பாதை வழிகளிலே கூடாரமடித்து தண்ணீர், கஞ்சி, சோறு, முதலுதவி, மருந்துகளும் வழங்கி நடக்க முடியாதிருப்போரை தமது வாகனங்களில் ஏற்றிச் செல்வதையும் இதனை அதிகமாக நாவலடி, பாலத்தடி, வீரச் சோலையில் காணக் கூடியதாகவும் உள்ளது.
கதிர்காமக் கந்தனின் பயணம் வரலாற்று ரீதியாக சிறப்பானதும், பல அதிசயங்கள் நிறைந்ததும் யாராலும் தடை போட முடியாத குறை கூற முடியாத வனப்பு மிக்க பயணமாக விளங்குகிறது.
அனுபவம்
சாரதாதேவி தட்சனாமூர்த்தி