211
யாழ்ப்பாணத்தில் கொள்ளைக் கும்பல் ஒன்றினால் வீடொன்று உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த நகை பணம் என்பவை கொள்ளையடிக்கப்பட்டுள்ளதுடன் , வீட்டில் இருந்த பெறுமதியான பொருட்களும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.
வட்டுக்கோட்டைப் பகுதியில் இன்றைய தினம் வியாழக்கிமை மதியம் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
வீட்டில் இருந்தவர்கள், வெளியே சென்றிருந்த வேளை , வீட்டினுள் அத்துமீறி ஆயுதங்களுடன் நுழைந்த கொள்ளை கும்பல், வீட்டின் கதவுகளை உடைத்து, வீட்டினுள் புகுந்து இரண்டு இலட்சத்து 11 ஆயிரம் ரூபாய் பணம் , மூன்று பவுண் சங்கிலி மற்றும் 2 பவுண் காப்பு ஆகியவற்றை கொள்ளையடித்துள்ளனர்.
அதேவேளை வீட்டில் இருந்த தையல் இயந்திரம் , குளிர்சாதன பெட்டி , தொலைக்காட்சி உள்ளிட்ட பெறுமதியான பொருட்களை அடித்து உடைத்துள்ளனர்.
வீட்டார் வீடு திரும்பிய போதே வீட்டில் கொள்ளை சம்பவம் இடம்பெற்றது தெரியவந்ததை அடுத்து , வட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
முறைப்பாட்டின் பிரகாரம் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில் , குறித்த வீட்டிற்கு அருகில் உள்ள வீடொன்றின் சிசிரிவி கமரா பதிவுகளின் அடிப்படையில் நபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரை காவல் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Spread the love