“மரபுரிமை” வேலைத்திட்டத்தின் மூலம் மக்களின் காணி உரிமையை பெற்றுக் கொள்வதன் மூலம் அவர்களின் சொத்து மதிப்பை அதிகரிக்க முடியும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடி மற்றும் கொரோனா தொற்று காரணமாக வீழ்ச்சியடைந்த சொத்துக்களின் பெறுமதி, நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் ஆற்றல் கொண்ட “மரபுரிமை” வேலைத் திட்டத்தினால் மீண்டும் உயர்ந்துள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
மன்னார் மாவட்ட மக்களுக்கு 20 லட்சம் இலவச காணி பத்திரம் “பரம்பரை” வழங்கும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் காணி உறுதிகள் வழங்கும் நிகழ்வில் இன்று (16) மன்னார் நகர மண்டப கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
மன்னார் மாவட்ட விவசாயிகளுக்கு உரம் வழங்குவதற்கான பணத்தை வழங்குவது தொடர்பான காசோலைகளையும் ஜனாதிபதி அவர்கள் வழங்கி வைத்தார்.
கடந்த மோசமான காலநிலை காரணமாக மன்னார் மாவட்டத்தில் அழிவடைந்த விவசாய பயிர்களுக்கு விவசாய காப்புறுதி நட்டஈடு வழங்கப்பட்டதுடன் அப்பகுதி மீனவர்களுக்கு மீன்பிடி உபகரணங்கள் கொள்வனவு செய்வதற்கு நிதி ஒதுக்கீடும் வழங்கப்பட்டது.
மன்னார் மாவட்ட செயலாளர் கே. கனகேஸ்வரன் அவர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு நினைவுப் பரிசையும் வழங்கி வைத்தார்.